Credit : Daily Thandhi
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு (Paddy Cultivation) பிறகு கோடைப்பயிராக பருத்தி, உளுந்து எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யபடும். பருத்தியை பொறுத்தவரை குறைவான பரப்பிலேயே சாகுபடி செய்வர். திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்படும். கடந்த சிலஆண்டுகளாக சாதகமான இயற்கை சூழல் நிலவியதால் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் காப்பணாமங்களம், இலவங்கார்குடி, கண்கொடுத்தவனிதம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பருத்தி (Cotton) சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி பஞ்சினை குறைந்த விலைக்கே விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதற்கு இந்த மாவட்டத்தில் பருத்தி சாகுபடி குறைவாக இருந்ததே காரணமாகவும் உள்ளது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் பருத்தி கொள்முதலை அரசே நேரடியாக செய்ய வேண்டும். மார்ச் மாதத்துடன் நெல் கொள்முதல் முடிந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிலையங்களை பருத்தி கொள்முதல் நிலையமாக மாற்றி, அதன்மூலம் பருத்தி கொள்முதல் செய்து இந்திய பருத்தி கழகத்துக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிண்டாலுக்கு ரூ. 10,000
மேலும் பருத்தி சாகுபடிக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரம் வரை செலவு ஏற்படும் நிலையில் குவிண்டாலுக்கு ரூ. 9500 அல்லது ரூ. 10 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். இனிவரும் காலங்களில், பருத்திக்காகவும் தனியாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
செவ்வாழையின் அற்புதப் பலன்களை எடுத்துரைக்கும் சித்த மருத்துவர்!
பிரபலமாகி வரும் வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Share your comments