முதுமலை புலிகள் காப்பகம் (MTR) பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தின் காரணமாக நான்கு நாட்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (திங்கள்கிழமை) சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த (8.4.2023) அன்று சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் திறப்பு விழா, எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சென்னை-கோவை இடையேயான 'வந்தே பாரத்' இரயில் சேவை தொடக்க விழா, மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரம், அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் வருகைத் தந்தார்.
அவற்றின் தொடர்ச்சியாக தனது பயணத்தின் போது, பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு தற்போது பிரபலமான "யானை விஸ்பரர்" ஜோடியான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, முதுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள அனைத்து விருந்தினர் இல்லங்கள், ஓய்வு விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற கடைகள் ஏப்ரல் 6-9 வரை மூடப்பட்டிருந்தன. மேலும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கும் முதுமலையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன சஃபாரிகள் நிறுத்தப்பட்டன.
மோடியின் பயணத்திட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் வனத்துறையினர் கட்டுப்பாடுகளை நீக்கி முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், உணவகங்கள் மற்றும் வாகன சஃபாரிகளை திங்கள்கிழமை (நேற்று) மீண்டும் இயங்க அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை காலை நேரங்களில் குறைவாக இருந்தாலும் மாலையில் கணிசமாக அதிகரித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்கார் விருது பெற்ற ”the elephant whisperer” ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு மற்றும் பொம்மி ஆகிய இரண்டு யானைகளைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் முதன்மையாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கின்றனர். இரண்டு யானைக் குட்டிகளுடனான வலுவான பிணைப்பு கொண்டிருக்கும் பழங்குடி ஜோடிகளான பொம்மன் மற்றும் பெல்லியுடன் புகைப்படம் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளார்கள். மேலும் தம்பதியினரை நேரில் சந்தித்து பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான விடுமுறையின் போது வந்த சுற்றுலா பயணிகளை விட இந்த ஆண்டு முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதென வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
புலிகளின் எண்ணிக்கையில் அடிவாங்கிய மேற்கு தொடர்ச்சி மலை- வனத்துறையினர் குழப்பம்
Share your comments