அரவை மற்றும் பந்து கொப்பரை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் குறைந்தப்பட்ச ஆதார விலையில் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நிலையில் அவற்றிற்கான நியாயமான சராசரி தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
” விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு (National Agricultural Co-operative Marketing Federation) மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அரசாணை (2D) எண்: 40, வேளாண்மை மற்றும் உழவர்நலத்(H2) துறை நாள்: 13.03.2024 -அன்று வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாக 7482 மெ.டன் கொப்பரை கொள்முதல்:
மேற்குறிப்பிட்ட அரசாணை அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 22950 மெ.டன் அரவை கொப்பரை மற்றும் 780 மெ.டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்திட உத்தரவிடப்பட்டு முதற்கட்டமாக 13.03.2024 முதல் 10.06.2024 முடிய 7483 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கொப்பரை கொள்முதல்:
இந்நிலையில் அரசாணை(2D)எண்.151, வேளாண்மை-உழவர்நலத்(H2), துறை நாள்: 23.09.2024-ன் படி இரண்டாம் கட்டமாக 10.09.2024 முதல் 08.12.2024 முடிய 15467 மெ.டன் அரவை கொப்பரை மற்றும் 780 பந்து கொப்பரை கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டு திருப்பூர் விற்பனைக்குழுவின் 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படவுள்ளன.
இம்மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.111.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.120 வீதம் 2024-ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக 10.09.2024 முதல் 08.12.2024 முடிய கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
Read also: பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!
தரம் எப்படி இருத்தல் வேண்டும்?
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள அரவை மற்றும் பந்து கொப்பரை கீழ்காணும் விவரப்படி நியாயமான சராசரி தரத்தினை (Fair Average Quality) கொண்டிருத்தல் வேண்டும்.
அயல் பொருட்கள்:
- அதிகபட்ச அளவு அரவை கொப்பரை ------- 1% (எடையில்)
- அதிகபட்ச அளவு பந்து கொப்பரை------- 2% (எடையில்)
பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை:
- அதிகபட்ச அளவு அரவை கொப்பரை ------- 10% (எண்ணிக்கையில்)
- அதிகபட்ச அளவு பந்து கொப்பரை------- 2% (எண்ணிக்கையில்)
சுருக்கம் கொண்ட கொப்பரை:
- அதிகபட்ச அளவு அரவை கொப்பரை ------- 10% (எண்ணிக்கையில்)
- அதிகபட்ச அளவு பந்து கொப்பரை- 10% (எண்ணிக்கையில்)
சில்லுகள்:
- அதிகபட்ச அளவு அரவை கொப்பரை ------- 10% (எடையில்)
- அதிகபட்ச அளவு பந்து கொப்பரை- 1% (எடையில்)
ஈரப்பதம்:
- அதிகபட்ச அளவு அரவை கொப்பரை-6% (எடையில்)
- அதிகபட்ச அளவு பந்து கொப்பரை-7% (எடையில்)
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் எண், மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் திருப்பூர் விற்பனைக்குழுவின் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.
எனவே, தென்னை சாகுபடி செய்துள்ள திருப்பூர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது விளைபொருளுக்கு அதிக விலை பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொள்கிறார்” என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு முதுநிலை செயலாளர்(பொ) திருப்பூர் விற்பனைக்குழு, திருப்பூர் (0421-2213304. மற்றும் கைபேசி எண்: 86675 43113 அவர்களை தொடர்பு கொள்ளவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more:
தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி- உழவு மேற்கொள்ள பின்னேற்பு மானியம்!
நெல்- வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Share your comments