ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அதேசமயம் லட்டு பிரசாதம் வழங்க பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஓலை பெட்டிகள் மூலம் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மூன்று விதமான அளவுகளில் ஓலை பெட்டிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இவற்றுக்கு 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என மூன்று விதமான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி லட்டு (Tirupati Laddu)
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி பேசுகையில், பிளாஸ்டிக் இல்லாத திருமலை என்ற முன்னெடுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதன்படி, லட்டு பிரசாதம் வழங்க பனை ஓலைகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இவை எளிதில் மக்கி சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுமட்டுமின்றி பனை ஓலைகள் பெட்டிகள் தயாரிப்பால் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். இதற்கு பக்தர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தகட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானம் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
3 திட்டங்கள்
ஒன்று அருங்காட்சியகம், மற்றொன்று லட்டு தயாரிப்பை நவீனப்படுத்துதல். அருங்காட்சியகத்தை பொறுத்தவரை 4,000 கலைப் பொருட்களுடன் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக டாடா பவுண்டேஷன் கைகொடுக்க முன்வந்துள்ளது. இதையடுத்து லட்டு தயாரிப்பிற்கு ரிலையன்ஸ் குழுமம் 50 கோடி ரூபாய் மதிப்பில் தானியங்கி இயந்திரங்களை வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இதன்மூலம் லட்டுகளின் தரத்தையும், அளவையும் அதிகரிக்க முடியும். மூன்றாவதாக திருமலையில் உள்ள காட்டேஜ்களை புனரமைக்கும் வேலைகளை முடுக்கி விடுவது. அதுமட்டுமின்றி 100 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் வகையில் புதிதாக ஒரு வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் அடுத்த ஓராண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இரயிலில் வரப்போகும் புதிய வசதி: இனி திருட்டுப் பிரச்சனையே இருக்காது!
Share your comments