
எங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயமே போதும். வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்” என, எட்டயபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். எட்டயபுரம் வட்டம் வெம்பூரில் சுமார் 2,700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களில் மானாவாரி நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிப்காட் தொழில் பூங்காவுக்கு தனியார் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த வேண்டும். மானாவாரி நிலங்களை கையகப் படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்க வெம்பூர், பட்டிதேவன்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர். தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் என்.பி.ராஜகோபால், வெம்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருப்பதி, கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், அதிமுக ஒன்றியச் செயலாளர் தனபதி ஆகியோரது தலைமையில், விவசாயிகள் பாரதி மணிமண்டபத்தில் இருந்து ஊர்வலமாக, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு நடந்த கூட்டத்துக்கு, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் மகாலட்சுமி, டிஎஸ்பி அசோகன், வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பேசியதாவது: சிப்காட் அமைக்க மானாவாரி நிலங்களை கையகப்படுத்தும்போது, அதனருகே உள்ள நீரோடைகளும் அழிக்கப்படும். விவசாயம் பாழாவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும். இப்பகுதியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள கால்நடைகளும் தண்ணீரின்றி மடியும் நிலை ஏற்படும். அதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் மானாவாரி நிலங்களே போதும். சிப்காட் தொழில் பூங்கா தேவையில்லை என்றனர்.
டிஆர்ஓ ரேவதி கூறும்போது, “உங்களது மனுக்களை வாங்கியுள்ளோம். அடுத்து என்ன செய்யலாம் என பார்த்துவிட்டு கூறுகிறோம். அனைவரது உணர்வுகளையும் நாங்கள் புரிந்துள்ளோம்” என்றார்.
வேலைக்கு வாய்ப்பில்லை: இதுகுறித்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரத ராஜன் கூறியதாவது: சிப்காட் அமைந்தால் தொழில் வளர்ச்சி அடையும். வேலை வாய்ப்பு பெருகும் என அரசு கூறுகிறது. ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு மேலக்கரந்தையில் காற்றாலை உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. இதில், உள்ளூர் இளைஞர்கள் 1,300 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என, அப்போதைய அரசு தெரிவித்தது.
இதனை நம்பி, சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயிகள் கொடுத்தனர். ஆனால், அந்த நிறுவனம் இந்த 4 ஆண்டுகளில் முத்துலாபுரம் குறுவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிபுரிகின்றனர். அரசின் மாயாஜால வாக்குறுதிகளை நம்புவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்
தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் என்.பி.ராஜகோபால் கூறும்போது, “வேம்பாரில் 1,200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் சிப்காட் அமைக்க கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தற்போது வெம்பூர் பகுதியில் சிப்காட் அமைக்க முயற்சிக்கின்றனர். தொழில் வளர்ச்சியை நாங்கள் தடுக்கவில்லை. வெம்பூர் பகுதியிலேயே ஏராளமான கம்பெனிகளின் தரிசு நிலங்கள் உள்ளன. அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளன. அவற்றை விடுத்து விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தான் எதிர்க்கிறோம்,” என்றார்.
Read more:
Foot and mouth disease: குமரி & சென்னை மாவட்ட கால்நடை விவசாயிகளின் கவனத்திற்கு
Rooftop Garden: எந்த வகையான மாடித்தோட்டம் காய்கறி உற்பத்திக்கு ஏற்றது?
Share your comments