மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய ஜனாதிபதி, திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் மாணவர்களின், அறிவொளியை தரும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி:
நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் தினத்தில், அவர்களின் அர்ப்பணிப்பிற்காக வாழ்த்துகிறோம். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி.
குடியரசு துணைத்தலைவர்:
முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் நேரத்தில் அவருக்கு அஞ்சலிகள். அறிவு, ஞானத்தின் மூலம் இளம் மனங்களை வடிவமைப்பதிற்கான ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்:
தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
எடப்பாடி பழனிச்சாமி: (தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்)
நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தந்து, மாணவச் செல்வங்களை பட்டைத் தீட்டிய வைரமாக ஒளிரச் செய்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த #ஆசிரியர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்களுடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்):
”என்றென்றும் எதிர்கால தலைமுறையை பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒப்பற்ற பெருமக்கள் ஆசிரியர்கள். கட்டை விரலை கேட்காமல் அறம் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நம் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான பந்தம் நீண்ட நெடியது! அது என்றும் தொடரும். ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். சனாதானம் ஒழிப்பு தொடர்பான பேச்சு இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள நிலையில் ”கட்டை விரல் கேட்காமல்” என பொடி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக இணையத்தில் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
கமல்ஹாசன்: (நடிகர்/ மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்)
கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன். அரசியல் தலைவர்கள் வாழ்த்து மட்டுமின்றி இன்றைய தினம் அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும் ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
6 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண நிதி
Good news- சென்னையில் தங்கத்தின் விலை ஏறிய ஒரே நாளில் சரிந்தது
Share your comments