நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் மணற்கேணி (Manarkeni) என்கிற செயலியில் அனைவருக்கும் காணொலி வடிவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலையூரில் அமைந்துள்ள தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் “மணற்கேணி” செயலி வெளியீட்டு விழா நேற்று மாலை நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் UNCCD துணைப் பொதுச் செயலாலர்/ நிர்வாகச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று “மணற்கேணி” (Manarkeni) செயலியினை வெளியிட்டார்.
மணற்கேணி செயலியின் சிறப்பம்சம் என்ன?
நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், மாணவர்களின் கற்றத்திறனை மேம்படுத்த செறிவோடும், சுவாரஸ்யமானதாகவும் மாற்றும் நோக்கில் காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை இச்செயலியில் உள்ளது.
நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள செயலி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணற்கேணி (Manarkeni) செயலி வெளியீட்டு விழாவில் பங்கேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாப் பேருரை ஆற்றினார். ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோரும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் தெரிவிக்கையில், “எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பாகுபாடின்றி அனைவருக்கும் காணொலிப் பாடங்கள் கிட்ட வேண்டும் என்பதற்காகத் தான் மணற்கேணி (Manarkeni) செயலி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
செயலி குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் அத்தொழில்நுட்பத்தை கல்வியின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது.
அதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் வகையில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கியுள்ள மணற்கேணி (Manarkeni) செயலி வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) உருவாக்கி அளித்துள்ள காணொலிகள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மணற்கேணி செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிப்பதன் மூலம் வருங்காலங்களில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்
மாநிலம் வாரியாக ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை?
Share your comments