வயல்வெளிகளில் உயிர்வேலி அமைப்பு முறையை மீண்டும் வழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், பறவைகள் பாதுகாக்கப்படுவதோடு, பயிர்களுக்கு இயற்கையான பாதுகாப்பு கிடைக்கும்.
உயிர்வேலி
வீடுகளை சுற்றி தற்போது சுற்றுச்சுவர்களும், வயல்வெளிகளை சுற்றி கம்பிவேலிகளும் பாதுகாப்பு கருதி அமைக்கப்படுகின்றன. ஆனால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருப்பது போன்று அதிக அளவில் சுற்றுச்சுவர்களும், கம்பிவேலிகளும் கிடையாது. ஆனால் அவற்றுக்கு பதிலாக வயல்வெளிகள், மனைப்பிரிவுகள் போன்றவற்றில் உயிர்வேலிகள் அமைத்து, சுற்றுச்சூழலை (Environment) கட்டிக்காப்பதில் விவசாயிகள் முன்மாதிரியாக விளங்கினர்.
இந்த உயிர்வேலியில் கள்ளிச்செடிகள், காட்டாமணக்கு செடிகள், கிளுவை மரங்கள், பூவரசு மரங்கள் போன்றவை இருக்கும். புதர் போன்ற அமைப்பு கொண்ட உயிர்வேலியில் பல்வேறு மூலிகை (Herb) தாவரங்கள் அடர்ந்து படர்ந்திருக்கும். பல்லுயிர் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் உயிர்வேலிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
பூச்சி மருந்து பயன்பாடு
இதில் வயல்களிலும், நிலப்பரப்புகளிலும் வாழும் சிறு, சிறு பூச்சிகளை உயிர்வேலிகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஓணான், தவளை, குருவிகள் ஆகியவை உணவாக உட்கொண்டு விடும். இதனால் தற்போது பயன்படுத்துவது போல் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தேவை இல்லாத சூழ்நிலை இருந்தது. அதேபோல் வேலிகளில் வாழும் ஓணான், தவளை போன்றவற்றை மயில்கள், பாம்புகள் ஆகியவை உண்டு, அவை அதிகமாக பெருகி விடாமல் பார்த்துக்கொண்டன.
அதேபோல் மயில், குருவி இனங்கள் அதிகம் பெருகி விடாமல் இருக்க, அவைகளின் முட்டைகளை உயிர்வேலி புதர்களில் மறைந்து வாழ்ந்த குள்ளநரிகளும், காட்டு பூனைகளும் உண்டு சமன்படுத்தி விடும். ஆனால் இன்றைய சூழலில் உயிர்வேலிகளை அழித்ததன் விளைவாக கட்டுக்கடங்காமல் வயல்களில் பூச்சி மருந்துகளை தெளித்து அவற்றில் விளையும் உணவுப் பொருட்களை உண்டு வருகிறோம்.
மூலிகைகள் கிடைப்பதில்லை
உயிர்வேலிகளில் மறைந்து வாழ்ந்து வந்த பல குருவி இனங்கள், குள்ளநரிகள், காட்டு பூனை வகைகள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. இதனால் வயல்களில் விளையும் உணவுப் பொருட்களை மயில்கள் சூறையாடி வருகின்றன. உயிர் வேலிகளில் படர்ந்து வளரும் முடக்கத்தான், பிரண்டை, கோவை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை தேடி அலைந்தும் கிடைக்காமல், பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சூரைப்பழம், கள்ளிப்பழம், அழிஞ்சி பழம் போன்ற மருத்துவ பயனுள்ள பழங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறிவிட்டோம்.
வழக்கொழிந்து போன, சுற்றுச்சூழலுக்கு அரணாக விளங்கிய, விவசாயத்தை கட்டிக்காத்த உயிர்வேலி முறைக்கு விவசாயிகள் மீண்டும் திரும்பினால் விவசாயிகள் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர முடியும்.
இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிகளில் தற்போதும் சில இடங்களில் உயிர்வேலிகள் (Biofences) அமைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. எனவே மீண்டும் உயிர்வேலி அமைப்பதை வழக்கத்துக்கு கொண்டு வந்தால், நம் சமுதாயம் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக இழந்த பல நல்ல விஷயங்களை மீட்டுவிட முடியும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க
மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!
வேளாண் மற்றும் இழுவை பணிகளுக்கு ஏற்ற புரட்சிகரமான DYNATRACK என்ற புதிய டிராக்டரை அறிமுகம்!
Share your comments