தருமபுரியில் கடந்த 3 மாதங்களில் 925 டன் தக்காளி, 1.72 கோடி ரூபாய் மதிப்பில், e-NAM (தேசிய வேளாண் சந்தை) போர்டல் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால் விரைவில் விற்பனை ரூ.2 கோடியைத் தொடும் என்று வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை சென்னை போன்ற மாநகரங்களில் கிலோவுக்கு 120 ரூபாய் வரை எதிர்பாராத விலை ஏற்றத்தை சந்தித்துள்ள நிலையில், பண்ணை பசுமை கடைகளில் கிலோ ஒன்றுக்கு 60 முதல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி விவசாயிகள் மகிழ்ச்சி:
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 6,100 ஹெக்டேரில் தக்காளி பயிரிடப்படுகிறது. சமீப காலம் வரை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க தனியார் சந்தைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், கடந்த மூன்று மாதங்களாக, வேளாண் விற்பனைத் துறையும், வேளாண் வணிகத் துறையும், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் (FPO) நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து, e-NAM போர்டல் மூலம் விற்பனை செய்து வருகின்றன. தருமபுரியில் இருந்து சராசரியாக 20 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு சேலத்தில் போர்ட்டல் மூலம் சந்தை மதிப்பை விட 20% கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து பாலக்கோடு விவசாயி என்.முத்தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், ”தருமபுரியில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, புதன்கிழமை ஒரு கிலோ ரூ.68 முதல் ரூ.70 வரை விற்பனையானது. சேலம், கோயம்புத்தூர் போன்ற பிற மாவட்டங்களை விட தர்மபுரியில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இங்கு தக்காளியின் விலை எப்போதும் குறைவாகவே உள்ளது. எனவே e-Nam மூலம், சேலம் சந்தை விலையில் எங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கிறோம், உள்ளூர் தேவைக்கேற்ப விலை மாறுபடும். முந்தைய விலைகளுடன் ஒப்பிடுகையில், நாங்கள் அதிக வருமானத்தைப் பெறுகிறோம்” என்றார்.
மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறுகையில், “சமீபத்தில் மாவட்டத்தில் கணிசமான மழை பெய்ததால் பூக்கும் நிலையில் இருந்த தக்காளி பயிர் பாதிக்கப்பட்டது. மேலும், கடுமையான கோடைக்காலம் தக்காளியின் உற்பத்தியையும் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பிற பகுதிகளிலும் இதே நிலை என்பதால் தான் தற்போது தக்காளி விலை உயர்வுக்கு காரணம்” என்றார்.
தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் ரேசன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய தயாராக உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை- விலை உயர்வு கட்டுக்குள் வருமா?
Share your comments