தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர் என சென்னை கோயம்பேட்டில் பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்தபின் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தமிழ்நாடு முழுவதும் 93.90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிற தொழிற்சங்கத்திற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சில வேண்டுக்கோளினை முன் வைத்தார். “ நீங்கள் குறிப்பிட்டுள்ள கோரிக்கையில் ஏற்கெனவே இரண்டு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் , மற்ற 2 விதமான கோரிக்கைகளுக்கு அரசு சார்பில் ஏற்கெனவே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தின் போது கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், அதனை போக்குவரத்து சங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிதி நிலை சீரானதும் நிச்சயம் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் போராட்டத்தில் ஈடுபடுவது கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். ”இந்தியாவிலேயே போக்குவரத்து ஊழியர்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது தமிழ்நாடு அரசு தான்.”
”போராடுவது உங்களது உரிமை, அதில் நாங்கள் தலையீடவில்லை. ஆனால், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட வேண்டாம் என தான் கோரிக்கை விடுக்கிறோம். தொழிற்சங்கம் சார்பில் எப்போது பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும், அரசு தயாராக இருக்கிறது” எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. அதில் சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார்.
பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதே கைவிட வேண்டும் என பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அரசின் சார்பிலும் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read also:
தலைநகருக்கு தொடர் எச்சரிக்கை- கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களின் விவரம்!
பயத்தை காட்டும் மக்காச்சோளம்- இறக்குமதி வரி குறித்து AIPBA அரசுக்கு கடிதம்
Share your comments