சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலை ரூ.200 வரை எட்டும் ஆபத்து இருப்பதால், இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்றுமதி
உலக அளவில் சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய். இதனை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 80 சதவீதம் எண்ணெய் அந்நாட்டில் இருந்தே இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பே சமையல் எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.
ரூ.200யைத் தாண்டும்
போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்து,ரூ.180 வரை தற்போது விற்கப்படுகிறது. இந்நிலைத் தொடரும் பட்சத்தில், விரைவில், சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.200யைத் தாண்டும் என வணிகர்கள் கூறுகின்றனர்.
சில்லரை விற்பனையில் இதன் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதே போல பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.125-க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. பாமாயில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போரினால் பாமாயில் ஏற்றுமதியை இந்த நாடுகள் குறைத்துள்ளன. இதுவே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் குடும்பத்தலைவிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக சமையல் எண்ணை பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள்.இதனால் கடைகளில் சமையல் எண்ணெய் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து கொடுங்கையூரில் உள்ள மளிகைக்கடை உரிமையாளர் பொன்ராஜ் கூறியதாவது:-
போர் தீவிரம் அடைந்து வருவதால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன.
குறிப்பாக சமையல் எண்ணெய் ரூ.40 வரை உயர்ந்திருப்பதால் விற்பனை பாதித்துள்ளது. பொதுவாக மளிகைகடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் தற்போது வியாபாரம் குறைந்துள்ளது.
இனி வரும்நாட்களில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதேபோல், கோதுமை விலையும் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டைக்கு ரூ,100 உயர்ந்துள்ளது. இதனால் மைதா, ரவை ஆகியவற்றின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments