தமிழக அரசின் ஊரக புறக்கடைக் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வாண்டிற்கான நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. எனவே புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 2019-20 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் முதற் கட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1600 பேருக்கு அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி 8 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 200 பேர் வீதம் 1,600 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு மாதமே வயதுடைய ரூ.3,750 மதிப்பிலான 50 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அத்துடன் அவற்றை பராமரிப்பதற்கு 30 சதுர அடி பரப்புள்ள ரூ.2,500 மதிப்பிலான கூண்டும் தரப்பட்டுள்ளது.
தேர்தெடுக்கும் பயனாளிகளுக்கு கோழியை முறையாக வளர்ப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் அளிக்கப்பட உள்ளது. கால்நடை மருத்துவர்களால் நடத்தப்படும் இம்முகாமில் பங்கேற்போருக்கு ஊக்கத்தொகையாக ரூ.150 மற்றும் செயல் விளக்க கையேடும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 5,175 பேருக்கு அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்க 4,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பயனாளிகளுக்கான தகுதிகள்
- கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல் எண் உடைய பெண்கள் தேர்வு செய்யப்படுவர்.
- சொந்த கிராமங்களில் நிலையாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
- அரசின் பிற சலுகைகளை முந்தைய ஆண்டுகளில் பெறாதவராக இருக்க வேண்டும். குறிப்பாக இலவச கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது.
- பிற்படுத்தப்பட்ட, ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.
- அரசு விதிமுறைகளின்படி 30 சதவீத பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை உதவி, மருத்துவ நிலையத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments