
பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ. 7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பஞ்சாப் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்த உதவும் என்றும் இந்த கூடுதல் நிதி மூலம் மாநிலத்தில் வேளாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் நவீனமயமாக்கப்படும் என்றும் முக்கியமாக பிரம்மாண்ட குளிர் சேமிப்பு கிடங்குகள், வேளாண் பொருள்கள் பதப்படுத்தும் வசதி, மதிப்புக்கூட்டும் வசதி உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில தோட்டக்கலை துறை அமைச்சர் மொஹிந்தர் பகத் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு வழங்கும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை பஞ்சாப் அரசு சிறப்பாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்தது. இதனை ஊக்குவிக்கும் வகையில் பஞ்சாப் அரசுக்கு வழங்கும் உள்கட்டமைப்பு நிதியை ரூ 4713 கோடியில் இருந்து சுமார் 7050 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
முதல்வர் பகவந்த் மான் தலைமையில் வேளாண்மை உற்பத்தியில் பிற மாநிலங்களை விட பஞ்சாப் முன்னிலையில் திகழ்கிறது. தேசிய அளவில் வேளாண்மை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறுவதிலும் பஞ்சாப் அரசு முதன்மையாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த பல்வேறு விவசாய சங்ககங்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
Share your comments