N95 வகை முகக் கவசங்கள் கொரோனா பரவுவதைத் தடுக்க பொருத்தமானதாக இருக்காது என்பதால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் அனைத்துமே கொரோனா பரவலைத்தடுக்கக் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து கண்டுபிடிக்கப்படாதநிலையில், தற்போதைக்கு நோய் பரவலைத் தடுக்கக் கையாளப்படும் வழிமுறைகளில், முகக்கவசமும், கையுறைகளுமே முக்கிய இடம் பிடிக்கின்றன.
அதிலும் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக முகக்கவசம் அணிவதை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில், துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள், மருந்தகங்களில் விற்கப்படும் முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் எந்த முகக்கவசம் சிறந்தது என்பதிலும், வெளியில் இருந்து வாங்கப்படும் முகக்கவசங்களை, எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் இன்னும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான ஒரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
அறிவுறுத்தல் (Instructions)
இதன் ஒருபகுதியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் சுகாதார அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொது மக்களால் சுவாச வால்வுகளுடன் கூடிய என்-95 முககவசங்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முககவசங்கள் கொரோனா பரவுவதைத் தடுக்க பொருத்தமானதாக இருக்காது என்று கூறியுள்ளது.முகம் மறைப்பு மற்றும் முகக்கவசங்கள் தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
சுவாச வால்வுகள் கொண்ட இந்த முகக்கவசங்கள் பொருத்தமானதாக இருக்காது. அவை முகக்கவசத்திலிருந்து வைரஸ் தப்பிக்க அனுமதிக்கலாம். எனவே கொரோனா பரவல் தடுப்புக்கு வால்வுகளுடன் கூடிய N-95 முகக்கவசங்கள் தீங்கு விளைவிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்கள் :
முகக்கவசங்களைப் பயன்படுத்துதல் குறிப்பாக வீட்டை விட்டு வெளியேறும்போது, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கப்படுகிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் பொது மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஹெல்த்கேர் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள அவர்கள் சரியான பிபிஇ உபகரணங்களை அணிய வேண்டும்.
ஒரு நபரிடம் குறைந்தது இரண்டு முகக்கவசங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டையும் மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகக்கவசம் ஒரு சுத்தமான துணியால் செய்யப்பட வேண்டும். இது முகத்தை மூடும்போது மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மறைக்க வேண்டும்.
முகக்கவசங்களை குடும்ப உறுப்பினர்களிடையே கூட பகிரப்படக்கூடாது.
தமிழக அரசு நடவடிக்கை
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.மேலும் குறைந்த விலையில் தரமான மாஸ்க் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments