இந்தியாவின் முதல் கஞ்சா மருந்து திட்டத்திற்கு ஜம்மு முன்னோடியாக இருக்கப் போகிறது என்று ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்முவிற்கு அருகிலுள்ள சாத்தாவில் உள்ள CSIR-Indian Institute of Integrative Medicine (IIIM) இன் கஞ்சா சாகுபடிப் பண்ணைக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.
இந்தியாவில் 'கஞ்சா ஆராய்ச்சி திட்டமானது' ஜம்முவில் CSIR-IIIM அமைப்பு, மற்றும் ஒரு கனடா நிறுவனத்துடன் தனியார் பொது கூட்டாண்மையில் தொடங்கப்பட்டது. மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளான நரம்பியல், புற்றுநோய், வலிப்பு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கான மருந்தினை தயாரிக்க இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது தற்சார்பு இந்தியாவின் ஒரு அம்சமாகும். இத்திட்டத்தின் மூலம் நரம்பியல் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான மருந்தினை உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதியில் போதைப்பொருள் பழக்கம் அதிகம் தென்படுகிறது. இந்த வகையான திட்டம் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையும் உள்ளது என அமைச்சர் கூறினார்.
CSIR-IIIM மற்றும் IndusScan இடையே அறிவியல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பயனளிக்கும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கஞ்சா ஆராய்ச்சி திட்டமானது ஜம்மு மற்றும் காஷ்மீரில் பெரும் முதலீட்டிற்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது ஆய்வின் ஒரு பகுதியாக CSIR-IIIM தற்போது கஞ்சாவை பயிரிடும் ஒரு ஏக்கர் பாதுகாக்கப்பட்ட பகுதியையும், காலநிலை கட்டுப்பாட்டு வசதிகளுடன் கூடிய ஆரய்ச்சி கூடங்களையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்து கேட்டறிந்தார்.
சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், விவசாயிகளுக்கு உதவும் விளைபொருட்களை அதிகரிப்பதற்கான சாகுபடி முறைகளையும் வலியுறுத்தி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நமது நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ற புதிய உள்நாட்டு ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த முயற்சியில் உயிரி தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், விஞ்ஞான வளர்ச்சியின் புதிய எல்லைகளை தொட ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார். கஞ்சா ஆராய்ச்சியில் CSIR-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டிகிரேடிவ் மெடிசின் முன்னோடியாக உள்ளது. மேலும் நாட்டில் கஞ்சா சாகுபடிக்கான முதல் உரிமத்தைப் பெற்றதும் இவர்கள் தான்.
இதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் கஞ்சாவை அறிவியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கான கொள்கை மற்றும் விதிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
pic courtesy: DrJitendraSingh (twitter)
மேலும் காண்க:
வயலில் நீர் தேக்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்
PMFBY: பயிர் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்- காரணம் ஏன்?
Share your comments