மரக்காணம் அருகே கால்நடைகளுக்கு பரவி வரும் மர்ம நோய் காரணமாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக தங்கள் பகுதியில் கால்நடை முகாம் அமைத்து, மர்மநோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 நாட்களில் 200 கால்நடைகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வசிக்கும் விவசாய மக்கள் பெரிதும் கால்நடைகளை நம்பியே வாழ்கின்றனர். கடந்த ஒரு வாரமாகக் கால்நடைகளை தாக்கி வரும் மர்ம நோயால் ஆடு, மாடுகள் அதிகம் இறந்தன. இந்த பகுதியில் கடந்த 7 நாட்களில் மட்டும் 31 மாடுகள் மற்றும் 170 ஆடுகள் நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளது.
வீக்கமடையும் கால்நடைகள்
உயிரிழந்த ஆடுகள் அனைத்தும் வயிறு வீக்கமடைந்து இறப்பதாகவும், மாடுகள் கால்கள் வீங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி இறப்பதாகவும் இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், கால்நடை மருத்துவமனை வெகு தொலைவில் உள்ளதால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக பணம் கேட்கும் தனியார் மருத்துவர்கள்
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தனியார் கால்நடை மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்க்கின்றனர். தனியார் கால்நடை மருத்துவர்கள் ஒரு மாட்டிற்கு 300 முதல் 400 ரூபாய் வரை கேட்பதால் மக்கள் அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தங்கள் பகுதிக்கு உடனே ஒரு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து, மீதம் உள்ள கால்நடைகளையாவது காப்பாற்றித் தருமாறு பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க....
Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!
Share your comments