தமிழகத்தில் சில மையங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமானது. சென்னை, வேலூர், மதுரை, கும்பகோணம், ராமேஸ்வரம், குழித்துறை பகுதிகளில் சில இயந்திரங்களில் லேசான பழுது கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர் ஓட்டுப்பதிவு துவங்கியது. தமிழகம் முழுவதும் அமைதியான தேர்தல் நடந்து வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஓட்டு போட்ட அதிகாரிகள்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் காலையிலேயே தங்களின் ஓட்டுக்களை செலுத்தினர்.
ஓட்டுப்பதிவு (Vote Polling)
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு, 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் அறிவிப்பு, ஜனவரி 26ல் வெளியானது.
மொத்தம் 74 ஆயிரத்து 383 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில், 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. போட்டியிடாமல் 14 ஆயிரத்து 324 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர். போட்டியின்றி 218 பேர் வெற்றி பெற்றனர். இதில், நான்கு மாநகராட்சி கவுன்சிலர்கள், 18 நகராட்சி கவுன்சிலர்கள், 196 பேரூராட்சி கவுன்சிலர்கள் அடக்கம். தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சியில், எட்டாவது வார்டில் போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் இறந்து விட்டனர். அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, 12 ஆயிரத்து 601 பதவிகளுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. இப்பதவிகளை கைப்பற்றுவதற்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுதும் 30 ஆயிரத்து 735 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு பணி (Protection Duty)
போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 1.13 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில், 1.35 லட்சம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மாலை 5:00 மணிக்கு பின் ஓட்டளிக்கலாம்.
தனித்து களம் கண்டுள்ள பா.ம.க., - தே.மு.தி.க., தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேர்தலில் வன்முறையை கட்டவிழ்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக, அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது. இதனால், இன்று நடக்கவுள்ள ஓட்டுப்பதிவின்போது, பல இடங்களில் பரபரப்புகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறியலாம்!
Share your comments