பழம்பெரும் தெலுங்கு நடிகர் சரத்பாபுவின் உடல் உறுப்புகள் முற்றிலுமாக செயலிழந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சரத் பாபு. முதலில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மறைந்த சரத்பாபுவிற்கு வயது 71.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள அமடலாவலசையில் 1952ஆம் ஆண்டு பிறந்த சரத்பாபு. அவரது இயற்பெயர் சத்தியம் பாபு தீக்சிதுலு. 1973 ஆம் ஆண்டு, தெலுங்குத் திரைப்படமான ராம ராஜ்ஜியம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1977-இல் கே.பாலசந்தரின் பட்டினப் பிரவேசம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கே.பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் வெங்கடாசலம் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, அவரது புகழ் தமிழ்த் துறையில் பல மடங்கு உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த முத்து, அண்ணாமலை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டி பறந்தன.
சரத்பாபு 1979 ஆம் ஆண்டு ஹரிஹரன் இயக்கிய சரபஞ்சரம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
ஹீரோ என்று மட்டுமில்லாமல் சரத் பாபு பல தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவர் மரோ சரித்ரா, சாகர சங்கமம், 47 ரோஜுலு, சிதாரா, அன்வேஷனா, அன்னய்யா, சீதகோகா சிலுகா மற்றும் பிற படங்களில் நடித்ததன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. தனது நடிப்பாற்றாலுக்கு வலுச்சேர்க்கும் விதமாக எட்டு நந்தி விருதுகளையும் வென்று உள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் மல்லி பெல்லி. இப்படம் வருகிற வெள்ளியன்று திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகரின் திடீர் மரணத்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சரத்பாபுவின் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க:
Share your comments