1. கதிரடிக்கும் இயந்திரம் வாங்க குறைந்தபட்சம் 40% மானியம் பெறலாம்!
அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைக்கவும், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிக்கவும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தனிப்பட்ட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், விவசாய பயன்பாட்டு குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்கள், கதிரடிக்கும் இயந்திரம் வாங்க குறைந்தபட்சம் 40%மானியம் பெறலாம். அதே நேரம், ஆதிதிராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் அணுகி பயன்பெறலாம்.
2.கால்நடை மருத்துவ முகாம் - முகாமில் பங்கேற்க கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.க.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா பூவாணம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் எதிர்வரும் செப்டம்பர் 15 2023 தேதி அன்று காலை 8 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில் கால்நடை மருத்துவ வல்லுநர்களால் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைப்பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை அளித்தல் ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
3.வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் மஞ்சள் சாகுபடி குறித்த பயிற்சி!
நீர் மேலாண்மை பயிற்சி மையம், திருச்சிராப்பள்ளி மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், மைராடா, கோபிசெட்டிபாளையம் இணைந்து வருகின்ற 22.9.2023 அன்று வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் மஞ்சள் சாகுபடி பயிற்சி நடத்தப்பட உள்ளது. மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாய பெருமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9443047454, 8122303725 எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
4.ஆதார் அப்டேட் - UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையானது, ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான செயல்முறைகளுக்காகவும் பயன்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது UIDAI. இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை கட்டணமின்றி புதுப்பிக்க ஒன்றிய அரசு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 14 வரை ஆதார் தொடர்பான தகவல் மாற்றங்களை செய்ய வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது UIDAI.
5. குடும்பத்தலைவிக்கான ரூ.1000- குறித்து முக்கிய அப்டேட்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்.15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுக்குறித்து ஆய்வில் ஈடுபட்டார். அப்போது திட்டம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார், அதில் அவர், தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் நிலையில் ஏற்பாடு செய்துள்ளோம். ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏடி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எந்த விதமான சிக்கலும் ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். அதே போல், வரும் 15 -ஆம் தேதி, தமிழக முதல்வர் சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll Free எண்ணும் இடம்பெற்றிருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
Share your comments