கிரிஷிஜாக்ரன் முன்னெடுப்பில் ICAR ஆதரவுடன் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற மில்லினியர் விவசாயிகள் விருது நிகழ்வில், 2024 ஆம் ஆண்டின் இந்தியாவின் பணக்கார விவசாயியாக குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த நிதுபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 12 பிராந்திய மொழிகளில் வேளாண் சார்ந்து இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் கடந்தாண்டு (2023) மில்லினியர் விவசாயிகள் விருது நிகழ்வு நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டுக்கான மில்லினியர் விவசாயி விருது நிகழ்வு டெல்லியிலுள்ள பூசா மைதானத்தில் கடந்த டிசம்பர் 1 முதல் 3 வரை நடைப்பெற்றது.
RFOI விருதினை வென்ற பெண் விவசாயி:
ICAR ஆதரவு மற்றும் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவியின் பங்களிப்புடன் நடைப்பெற்ற MFOI விருது நிகழ்வில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘Richest Farmer of India’ (இந்தியாவின் பணக்கார விவசாயி) விருதினை குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த நிதுபென் படேல் வென்றார். ஒன்றிய அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிதுபென் படேலுக்கு RFOI விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பிளாஸ்டிக் இல்லாத ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நிதுபென் படேல், பாரம்பரியம், புதுமை மற்றும் வேளாண் பணியில் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவராக திகழ்கிறார். சஜீவன் அறக்கட்டளையின் (sajeevan foundation) நிறுவனர் என்ற முறையில் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இயற்கை வேளாண்மை மற்றும் அரியவகை மருத்துவ மூலிகைகள் உற்பத்தியில் நிதுபென் படேல் மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 100- க்கும் மேற்பட்ட அரிய மருத்துவ மூலிகைகளை வளர்த்து வருகிறார். விவசாயம் தாண்டி அவரது குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்று, பிளாஸ்டிக் இல்லாத ராஜ்கோட் ஆகும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை மேம்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 10,000 பருத்தியிலான பைகளை விநியோகிப்பதை முன்னெடுத்தார். அவை பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
அவர் ஆண்டுதோறும் மரம் நடும் இயக்கங்களை நடத்தி வருகிறார். தனது 'ருஷி க்ருஷி' முயற்சியின் மூலம், இந்தியா முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்தும், நிலையான விவசாய முறைகளை கடைபிடிப்பது குறித்தும் பயிற்சி வழங்கி வருகிறார்.
குஜராத் அரசின் கனவுக்கு அடித்தளமிட்டவர்:
நிதுபெனின் தலைமையின் கீழ், சஜீவன் அறக்கட்டளை விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, அசாதாரண மைல்கற்களை எட்டியுள்ளது. வெறும் 45 நாட்களுக்குள், அறக்கட்டளை 84 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பதிவு செய்துள்ளது. 100% இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் குஜராத் அரசின் முன்முயற்சிகளுக்கு நிதுபென் அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளார்.
MFOI 2024 விருது நிகழ்விற்கு ஏறத்தாழ 22,000 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், லாபகரமான வேளாண் பணியினை மேற்கொள்ளும் 400-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் என கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி.டொம்னிக் தெரிவித்துள்ளார்.
Read more:
டிசம்பர் இறுதி வரை பருவமழை- பயிர் பாதிப்பு குறித்து வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
வெளியானது BAHS 2024: நடப்பாண்டு நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
Share your comments