டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் வரத் தாமதமானதால் கல்லணையைத் திறக்க வந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட நேரம் காத்திருந்து கல்லணையைத் திறந்தனர்.
கல்லணை
காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 3,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின் படிப்படியாக 10,000 கன அடி வீதம் உயர்த்தப்பட்டது.
காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை இரவு அல்லது செய்வாய் காலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கல்லணையிலிருந்து காலை 11.00 மணிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காத்திருந்த அமைச்சர்கள்
இதையொட்டி, இரவு முதலே கல்லணையில் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. காலையில் கல்லணை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோரும் காலை 10.30 மணிக்கே கல்லணை திறப்பு விழாவுக்கு வந்தனர். ஆனால், கல்லணைக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை, இதனால் நீண்ட நேரம் அமைச்சர்கள் கல்லணையில் காத்திருந்தனர்.
பின்பு ஒரு வழியாக மதியவேளையில் கல்லணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதையடுத்து, தண்ணீரை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன் , இரா. துரைக்கண்ணு, புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அணை திறப்பு
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து விவசாய பணிகள் தொடங்குவதற்காக காவிரியில் 3015 கன அடியும், வெண்ணாற்றிலிருந்து 3005 கன அடியும், கல்லணைக் கால்வாயிலிருந்து 709 கன அடியும், கொள்ளிடத்திற்கு 501, கன அடியும் இன்று திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணை தலைப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கடைமடைப் பகுதி வரை சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாசன வசதி பெரும் கிராமங்கள்
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 3.9 லட்சம் ஏக்கர் நிலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.30 லட்சம் ஏக்கர் நிலங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 0.27 லட்சம் ஏக்கர் நிலங்களும், கடலூர் மாவட்டத்தில் 1.00 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும், நடப்பாண்டில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ள 1.63 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களும் பயனடையும். கல்லணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரி பாசனப் பகுதிகளில் கடைமடைப் பகுதி வரை சென்ற பின்னர், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திற்கு உரிய நீர் பங்கீடு அளிக்கப்படும்.
மேலும் படிக்க
மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!
Share your comments