தமிழகத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே, மழைப்பொழிவு குறைந்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினை அடிப்படையாக கொண்டு அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம் பின்வருமாறு-
19.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
20.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
21.01.2024 முதல் 25.01 2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
19.01.2024 மற்றும் 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் வானிலைத் தொடர்பான விவரங்களுக்கு- mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜன 1 முதல் தற்போது வரை தமிழகத்தில் தலா 49.3 மி.மீ அளவு மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read also:
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
அதிகரித்த தக்காளி- உருளை: தோட்டக்கலை சாகுபடி ரிப்போர்ட் வெளியீடு
Share your comments