வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலை பெற்றுள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று அல்லது நாளை காலை தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் வட தமிழகம்-புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் எனவும் பின்பு தெற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வடகடலோரத் தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 21, 22 ஆகிய நாட்களில் வடத்தமிழக கடலோரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
21-ம் தேதியில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில கனமழையும் பெய்யலாம். 23-ம் தேதியில் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழகம்-புதுவை, இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் இன்று முதல் 23ம் தேதி வரை மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments