தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.11.2023) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்), இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் தற்போது வாகனங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்கண்ட இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய இரண்டு சந்திப்புகளிலும் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளில் 'U' வடிவ மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.108.13 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிகளுள் ஒன்றான 18.15 கோடி செலவில்
இந்திரா நகர் 'U' வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் தற்போது முடிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
U வடிவ மேம்பாலத்தின் சிறப்பம்சம்:
இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 237 மீட்டர் நீளமுள்ள இப்பாலம், 12.5 மீட்டர் நீளமுள்ள 19 கண்களை கொண்டதாகும். ராஜீவ் காந்தி சாலையின் வலது புறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும், இடது புறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திரா நகர் "U" வடிவ மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுவதால், சோழிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி "U" திருப்பம் எடுத்து, இந்திரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல இயலும்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மரு.எஸ்.பிரபாகர், இ.ஆ.ப., செயல் இயக்குநர் எம்.விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திரா நகர் சந்திப்பு பகுதியிலிருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், கே.கணபதி, ஜெ.எம்.எச்.அசன் மௌலானா,ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் காண்க:
செம்மறி ஆடுகளை இலவசமாக தரும் நெருக்கடியில் விவசாயிகள்- காரணம் என்ன?
12 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்- மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை
Share your comments