சென்னையில் பல இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர், அந்தந்த பகுதி மக்கள் எடுக்கும் சில நடவடிக்கைகளால் மின்னல் வேகத்தில் வடிந்துவிடும் என்கின்றனர் பொறியாளர்கள். வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான சாலைகள், சுரங்கப்பாதைகள், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, ஆட்சியாளர்கள் ஆய்வு செய்வது, நிவாரணம் வழங்குவது, சீரமைப்புக்கு புதிய திட்டம் அறிவிப்பது வழக்கமாகி உள்ளது. இது ஒரு பக்கம் நடந்தாலும், வீட்டை சுற்றி தேங்கியுள்ள வெள்ள நீர் எப்போது வெளியேற்றப்படும் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
புதிய புதிய பெயர்களில் மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், மழைக்காலத்தில் இத்திட்டங்கள் பயன் அளிக்கிறதா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
கட்டுமான குறைபாடுகள்
இது குறித்து, சென்னை கட்டுமான பொறியாளர் சங்க நிறுவன தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது: நீர் நிலைகளை மக்கள் ஆக்கிரமித்ததே தற்போதைய வெள்ளத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இத்துடன், வடிகால் அமைப்புகளில் காணப்படும் கட்டுமான குறைபாடுகள் முக்கிய காரணமாக உள்ளது. சென்னையில் பல இடங்களில், சாலை மட்டம் பார்த்து புதிய மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பழைய சாலையை தோண்டாமல் அமைக்கப்பட்ட புதிய சாலைகளால், வடிகால்களுக்கு நீர் செல்லும் வழிகள் அடைந்து போயுள்ளன. சில ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் தண்ணீர் செல்லும் வாட்டமும், அந்தந்த பகுதி நில அமைப்பும் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும். இந்த கோளாறுகளை சரி செய்வதுடன், மழைநீர் வடிகால்கள் ஒன்றுக்கொன்று முறையாக இணைந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பொது மக்கள், தங்கள் வீடுகளில் சேரும் குப்பை கழிவுகளை குறைந்தபட்சம் மழையின் போதாவது வெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை பணியாளர்கள் வரும் வரை காத்திருக்காமல், தங்கள் தெருக்களில் மழைநீர் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள சிறு அடைப்புகளை மக்களே சரி செய்ய முன்வர வேண்டும். இது போன்ற விஷயங்களில் மக்கள், அதிகாரிகள் கவனம் செலுத்தினால் மின்னல் வேகத்தில் வெள்ள நீர் வடிவது சாத்தியம்.
மேலும் படிக்க
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!
பல வண்ணங்களில் வானிலை எச்சரிக்கை: எந்த கலருக்கு என்ன அர்த்தம்!
Share your comments