மக்காச்சோளத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.1600 வரை இந்த ஆண்டு விலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (TNAU) முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் மக்காச்சோளம் (Corn) கிட்டத்தட்ட 15 சதவீதம் பங்களிக்கிறது. மத்தியப் பிரதேசம் கர்நாடகா, பீகார், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை இந்தியாவில் மக்காச்சோளம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.
இதில் தமிழகத்தைப் பொருத்தவரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை திருப்பூர், விழுப்புரம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகியவை மக்காச்சோளம் அதிகம் பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும்.
வர்த்தக மூலங்களின் படி, தமிழக கோழிப்பண்ணை நிறுவனங்களின் மக்காச்சோளத் தேவையை கர்நாடகா, பீகார் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் மக்காச்சோளம் பூர்த்தி செய்யும். இந்த பருவத்தில் குறைந்த விலை காரணமாக, உடுமலைப்பேட்டை பகுதியில் மக்காச்சோள உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது.
அதேநேரத்தில், முசிறி, பெரம்பலூர் மற்றும் துறையூர் பகுதிகளில் பயிர்கள் படைப்புழு தாக்கம் இல்லை என்பதுவும் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகாவிலிருந்து வரும் மக்காச் சோளம் வரத்தானது டிசம்பர் மாதம் இறுதி வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது
இச்சூழ்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நல்ல தரமான மக்காக சோளத்தின் விலையானது நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை குவிண்டாலுக்கு ரூ.1400 முதல் ரூ.1600 வரை இருக்குமென கணித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம் புத்தூர் - 641 003. தொலைபேசி எண்: 0422-2431405 மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், சிறு தானிய துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி எண்: 0422-2450507 தொடர்பு கொள்ளலாம்
மேலும் படிக்க...
பண்ணை இயந்திர வங்கி அமைக்க மத்திய அரசு 80% மானியம்- 20% முதலீடு செய்ய நீங்க ரெடியா?
Share your comments