கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் பாசனத்திற்காக நாளை பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் (Dams) திறக்கப்படுகின்றன. கால்வாய்கள் எதுவும் தூர்வாரப்படாத நிலையில், முறையாக தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் சம்பரதாயத்திற்காக அணைகள் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பாசனத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அணைகள் நிரம்பியது
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) துவங்கும் முன்பே, கடந்த மே மாதத்தில் கொட்டிய கனமழையால் அணைகள், குளங்கள் அனைத்தும் நிரம்பின. சீஸன் மழை துவங்கும் முன்பே அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையில் 44.36 அடி தண்ணீர் உள்ளது. பெருஞ்சாணியில் 74.41 அடி, சிற்றாறு ஒன்றில் 16.79 அடி, சிற்றாறு இரண்டில் 16.89 அடி, மாம்பழத்துறையாறில் 54.12 அடி, முக்கடல் அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது.
மழை கைகொடுத்துள்ளதால் குளத்து பாசன பகுதிகளில் உள்ள வயல்களில் கன்னிப்பூ நடவுப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டேர் பரப்பளவில், கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தண்ணீர் திறப்பு
இந்நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வேளாண் பாசனத்திற்கு நாளை (4ம் தேதி) தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதன்படி பேச்சி்ப்பாறை அணையில் பாசன நீர் திறப்பு நிகழ்ச்சி நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு நீர் விநியோகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் விவசாய பாசனத்துறையினர், பொதுப்பணித்துறையினர் பங்கேற்கின்றனர்.
தூர்வாரப்படாத கால்வாய்கள்
வழக்கமாக ஜூன் மாதம் பாசன நீர் விநியோகம் செய்வதை முன்னிட்டு ஏப்ரல், மே மாதத்தில் கல்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு (Corona Curfew), கனமழை போன்ற காரணத்தால் இதுவரை குமரி மாவட்டத்தில் உள்ள பாசன கால்வாய்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.
பாசனத்துறையினர் குற்றச்சாட்டு
புதர் மண்டிக் கிடக்கும் கால்வாயில் முறையான பாசன நீர் விநியோகம் நடைபெற வாய்ப்பில்லை. எனவே அணைகள் திறப்பு சம்பரதாயத்திற்காக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி. இதனால் விவசாயிகள் முழு பலனை பெற வாய்ப்பில்லை என பாசனத்துறையினர் குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில்; குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் திறந்து கன்னிப்பூ சாகுபடி, மற்றும் பிற விவசாய தேவைக்காக நீர் விநியோகம் செய்வதற்கு முன்னதாகவே ஆறு, கால்வாய், கிளைகால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்படும்.
இப்போது ஊரடங்கை காரணம் காட்டி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. இதைப்போல் கடந்த மாதம் தொடர்ச்சியாக கனமழை (Heavy Rain) பெய்தது. புதர்மண்டி கிடக்கும் கால்வாய்களில் பாசன நீர் முறையாக சென்று அனைத்து பகுதி விவசாய நிலங்களுக்கும் போய் சேர வாய்ப்பில்லை.
எனவே அணைகளை திறந்தாலும் கடைமடை பகுதிகளுக்கு முறையாக பாசன நீர் வந்து சேரும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் பொதுப்பணித்துறையினர் தூர்வார வேண்டும்.
மேலும் படிக்க
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!
Share your comments