அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சியை கைப்பற்ற போட்டி போட்டு காய் நகர்த்தி வருகின்றனர். நீதிமன்றத்தை பொறுத்தவரை முதல் ரவுண்டில் பன்னீர்செல்வம் ஜெயித்து விட்டார். அடுத்த ரவுண்டிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மாருதி 800 (Maruti 800)
கட்சி யாருக்கு சொந்தம் என்ற இவர்களின் சண்டை இப்போது டில்லியிலும் நடக்கிறது. மறைந்த ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த போது, டில்லியில் 'மாருதி 800' காரை உபயோகப்படுத்தினார். அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கராஜில் நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த கார், இப்போது முன்னாள் துணை சபாநாயகரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான தம்பிதுரையின் டில்லி பங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காருக்கு இப்போது பன்னீர்செல்வம் சொந்தம் கொண்டாடி வருகிறார்.
இவருடைய மகன் ரவீந்திரநாத் இப்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி விட்டோம் என லோக்சபா சபாநாயகருக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பழைய காரை எப்படியாவது தன் பக்கம் எடுத்து வந்துவிட வேண்டும் என ரவீந்திரநாத் முயற்சி செய்து வருகிறார். ஜெயலலிதா பயன்படுத்திய கார் தங்களிடம் இருந்தால் நல்லது என பன்னீர்செல்வமும் நினைக்கிறாராம். ஆனால், தம்பிதுரை பங்களாவிலிருந்து இந்த காரை எப்படி வெளியே கொண்டு வருவது என, பன்னீர்செல்வம் தரப்பில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
டில்லியில் அ.தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, ஜெயலலிதா உபயோகித்த பொருட்களோடு இந்த காரையும் கண்காட்சியில் வைக்கலாம். ஆனால், அந்த அலுவலகம் யாருக்கு -சொந்தம் என்பதும் பிரச்னையாக உள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி சண்டையால், எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.
மேலும் படிக்க
ஏலத்தில் நல்ல விலைக்கு போன எள்: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!
மின் கட்டண உயர்வுக்கு காரணமே மத்திய அரசு தான்: மின்வாரியம் அறிவிப்பு!
Share your comments