கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், நோய் தாக்குதலுக்கு உள்ளான கால்நடைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் விளக்கம் அளித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கால்நடைகளை தாக்கும் இலம்பி நோய் நச்சு உயிரி மூலம் பரவுகிறது. கொசு, ஈ, உண்ணிக்கடி, பாதிக்கப்பட்ட மாடுகள், கறவையாளர்கள், கன்றுக்குட்டி பாதிக்கப்பட்ட மாட்டின் பால் அருந்தும் போதும், நோய் உள்ள பகுதியில் இருந்து மாடுகளை வாங்கி வருவதன் மூலமும் பரவுகிறது.
கண்களில் நீர் வடிதல், மூக்கில் சளி, கடுமையான காய்ச்சல், உடல் முழுதும் கண்டு கண்டாக வீக்கம், உருண்டையான கட்டி உடைந்து சீர் வழிதல், நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படுவது. கால்கள் வீங்கியிருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை நோயின் அறிகுறிகள்.
இதனால் பால் உற்பத்தி குறையும், மாடு சினைபிடிப்பதில் பாதிப்பு ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறையும். மடி நோய் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்று இருந்தால் மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து வழங்க வேண்டும். இந்நோய் பாதிக்கப்பட்ட பசு, எருமைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்து குணப்படுத்த முடியும்.
தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம், மஞ்சள் அளவாக கலந்து வாய் வழியாக கொடுத்து வந்தால் மாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். வெற்றிலை 10, மிளகு 10 கிராம், உப்பு 10 கிராம், வெள்ளம் தேவையான அளவு அரைத்து கலந்து சிறிது சிறிதாக நாக்கில் தடவி கொடுப்பதன் மூலம் மாடுகள் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க:
Share your comments