கருவறை முதல் கல்லறை வரை வாழ்வியல் முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைந்துள்ளது. நிலம், நீர்,காற்று என அனைத்தையும் கடவுளாக வைத்து வழிபட்ட நமது முன்னோர் ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வில்வம் என கோயிலுக்கு ஒரு மரத்தை வைத்து ஸ்தல விருட்சமாக வணங்கினர். ஆனால் நாகரீக வளர்ச்சி, பொருளாதார தேவை காரணமாக மனிதன் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து நகர்பகுதிக்கு வந்தான். கால மாற்றத்திலும், குடும்பச் சூழலிலும் இயற்கையுடனான அவனது உறவில் விரிசல் ஏற்பட்டது.
இயற்கையின் பலன் (Benefits of Nature)
மீன் பிடித்து சாப்பிட்ட குளமும், ஏரியும், கண்மாயும் நீரின்றி, மணல் இன்றி சூழல் மாறுபாட்டால் வறண்ட நிலங்களாக மாறிவிட்டன. நீர்வரத்து கால்வாய்கள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. உலக விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்த பின்பு தற்போது, அரசும் இயற்கை சூழல் காக்கும் திட்டங்களை செயல்படுத்த துவங்கி உள்ளது. இயற்கையின் வரங்களான காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பை தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையை பாதுகாத்து மழையும் தருகிறது. மனிதனை தாக்கும் நோய்க்கான மருந்துகளில் 75 சதவீதம் காடுகளில் இருந்தே கிடைக்கிறது.
பெருகி வரும் மக்கள் தொகையும், மனிதனின் கலாச்சார மாற்றமும் தான் இயற்கையின் இடர்பாடுகளுக்கு காரணம். வாகன புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியேறும் கார்பன் உலகளவில் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. இதை உணர்ந்து பல தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அரசும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறது. தற்போது கோடை வாட்டி வரும் சூழலில் அவ்வாறு நடப்பட்ட செடி, மரங்கள் வாடி வருகின்றன. இவற்றை காப்பாற்றும் செயலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு முன்மாதிரியாக சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரும், இயற்கை ஆர்வலருமான செந்தில்குமார் சாலையோரங்களில் உள்ள மரக் கன்றுகளை தானே முன்வந்து பராமரிக்கிறார்.
பராமரிப்பு
வெந்தும் தணியாத வெயிலில் தொடர்ந்து மரங்களை குளிர்விக்கும் வகையில் லாரிகளில் நீரை எடுத்து வந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறார். இந்நாட்களில் மட்டுமின்றி தண்ணீர் தேவைப்படும் சூழல்களிலும் செடிகளுக்கு தனது சொந்த செலவில் வாகனம் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுகிறார். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகளை வாட விடாமல் உயிரூட்டுகிறார். நீர் பாய்ச்சிய பிறகு மரக்கன்றுகளை பசுமையாக பார்க்கையில் மக்கள் பரவசப்பட்டு செந்தில்குமாரை பாராட்டுகின்றனர்.
மன மகிழ்ச்சி (Happiness)
நெடுஞ்சாலை துறையினர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் சாலையில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மரக் கன்றுகளை நடும் போதே இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது எனக் கூறியிருந்தேன். மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேவைப் படுகின்ற நேரங்களில் எங்களின் வாகனத்தின் மூலமாக செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இப்பணி இரு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மன மகிழ்ச்சியை தருகிறது.
மேலும் படிக்க
Share your comments