1. செய்திகள்

கூட்டுப் பண்ணை விவசாயம் செய்து வரும் பெண்கள்!

Harishanker R P
Harishanker R P

மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்தே அதில் அடிமை முறை இருந்து வருகிறது. குறிப்பாக நிலம் வைத்திருப்பவர் நிலமில்லாத மக்களை சொற்ப கூலி கொடுத்து வேலைக்கு வைத்திருந்தனர். தமிழகத்தில் பண்ணைஅடிமை என்ற நிலை இருந்தது. சுதந்திர இந்தியா அமைந்த பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டதே தவிர ஒருவர் அதிக நிலம் வைத்திருக்கும் நிலை மாறவில்லை. இதை தடுக்க நில உச்ச வரம்பு சட்டம் அமைக்கப்பட்டது. அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று நிலமில்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசு வழங்கியது. இதனால் பலர் பலனடைந்தாலும் அடிமை முறை மட்டும் அப்படியே இருந்தது.

விவசாயத்தில் கூட்டுப் பண்ணையை அறிமுகப்படுத்தி விதைகள், மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை அரசு கொடுத்து, அதில் விளைவிக்கும் பொருட்களை நிலத்தில் உழைக்கும் மக்களுக்கு பிரித்து கொடுத்தால் பண்ணையடிமை முறையை ஒழிக்கலாம் என டாக்டர் அம்பேத்கர் தன் தொகுப்பு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளில் கூட்டுப்பண்ணை விவசாயம் பெரிதளவில் கை கொடுத்துள்ளது. அந்த முறையினை இங்கு கடைபிடித்து வருகிறார்கள் பள்ளூர் தலித் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். தரிசாக எதுவும் பயன்படுத்தாமல் கிடக்கும் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து அதில் விளைவிக்கும் பொருட்களை அந்த நிலத்தில் உழைத்தவர்களே பங்கிட்டுக் கொள்கிறார்கள். இந்த கூட்டுப் பண்ணை முறை குறித்து இதில் வேலை செய்து வரும் சாந்தியிடம் கேட்ட போது…

‘‘என்னுடைய சொந்த ஊர் பெருமூச்சி கிராமம். சின்ன வயசிலேயே மக்கள் பணிக்காக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பதுதான் என் வேலையாக இருந்தது. அதைத் தவிர இங்குள்ள பெண்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி வேலையும் சொல்லிக் கொடுத்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கு தெரிந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதற்கான நீதிக் கேட்டு போராட்டங்கள், வழக்கு தொடுத்து அந்த சிறுமிக்கு நீதி பெற்று தந்தோம். அப்போது பெண்களின் நலனுக்காக ஒரு அமைப்பு வேண்டும் என்று தோன்றியது.

கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம் என்ற பெயரில் அமைப்பினை துவங்கி அதில் பெண்களின் நலன் குறித்த வேலையில் ஈடுபட துவங்கினேன். எங்களுடையது கிராமம் என்பதால், வீட்டில்தான் பிரசவம் நடக்கும். அதனால் கிராமம் கிராமமாக சென்று பெண்களை சந்தித்து பிரசவ நேரத்தில் எவ்வாறு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். பெண்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து பல வேலைகளில் ஈடுபட்டேன். குறிப்பாக பெண் தலைமைகளை உருவாக்கி, அதிகாரமிக்க வேலைகளில் ஈடுபட வைக்க திட்டமிட்டேன். பெண்களுக்கான உரிமைகள் என்னைப் பொறுத்தவரை அவர்களை பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான். அது குறித்து நான் செல்லும் இடங்களில் சந்திக்கும் பெண்களிடம் பேசுவேன். இந்த நிலையில்தான் பெண்களை நில உடமைதாரர்களாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன்.

இங்குள்ள பெண்கள் காலம் காலமாக விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களின் உழைப்பினை மற்றவருக்கு கொடுத்துவிட்டு சொர்ப்ப சம்பளம் பெற்று வந்தார்கள். சொத்து என்பது ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவர்கள் வசிக்கும் வீடு அவர்களுக்கு சொந்தமானது கிடையாது. அதனால் பிரச்னை என்று வந்தால், கணவன் அது தன் வீடு என்றும், மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறான். அதனால் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்’’ என்றவர் கூட்டு முறையில் விவசாயம் செய்வது குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘பெண்களிடம் சொத்து என்பது கிடையாது. குறிப்பாக பட்டியலினப் பெண்களிடம் சொத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. விவசாய கூலிகளாகவே வாழ்கிறார்கள். சொந்தமாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கடன் கூட கிடைப்பதில்லை. சாதிய அடக்கு முறை ஒரு பக்கம், வறுமை மறுபக்கம் என கடுமையான சூழலில்தான் இவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென ஒரு தொழிலை உருவாக்கி அவர்களை பொருளாதார சுதந்திரம் மிக்க பெண்களாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம்.

கிராமங்களில் அரசுக்கென தரிசு நிலங்கள் உள்ளன. அதனை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அந்த நிலங்களை நாங்க கையில் எடுத்து அதில் கூட்டுப் பண்ணை முறையை செய்ய முடிவு செய்தோம். அதில் முதல் கட்டமாக அரசு நிலங்கள் குறித்து ஆய்வு செய்தோம். பள்ளூர் பகுதியில் அதிகளவில் அரசு நிலங்கள் இருப்பது தெரிய வந்தது. விவசாயம் செய்ய ஏற்றதாகவும் இருந்ததால் பெண்களிடம் பேசி அதில் விவசாயம் செய்யத் தொடங்கினோம். அதைப் பார்த்த ஆண்கள் அந்த இடம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்.

அரசுக்கு சொந்தமானது எனச் சொல்லியும் பிரச்னை செய்தார்கள். அதனால் நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயம் செய்வதற்கு அனுமதி வேண்டி மனு கொடுத்தோம். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கினார்கள். பெண்களே எல்லா வேலைகளையும் செய்தார்கள். டிராக்டர் ஓட்டுவது, களை எடுப்பது, விதை நடுவது, அறுவடை செய்வது என அனைத்தும் செய்தார்கள். 40 பெண்களை கொண்டு 7 ஏக்கரில் இந்த கூட்டுப் பண்ணை முறையை செய்து வருகிறோம். கம்பு, உளுந்து, துவரை, பச்சைப்பயறு, பாசிப்பயறு, கொள்ளு போன்றவற்றை விளைவித்து எங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்ைததான் கடைபிடிக்கிறோம்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது போல நாங்க விதைப்பதை எங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்கிறோம். கூட்டுப் பண்ணையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் ஏற்கனவே 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பதால், காலை முதல் மதியம் வரை அந்த வேலைக்கு சென்று விடுவார்கள். அங்கு வேலை முடிந்ததும் நில வேலைக்கு வந்திடுவார்கள். கூட்டுப் பண்ணை முறை இங்குள்ள பெண்களுக்கு பெரியளவில் கை கொடுத்து வருகிறது. இங்கு சக்சஸ் அடைந்துவிட்டதால், அடுத்துள்ள கிராமங்களிலும் இந்த முறையினை கொண்டு செல்ல இருக்கிறோம்’’ என்கிறார் சாந்தி.

English Summary: Women farmers contribution in Tamil Nadu

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.