தென்னை ஒரு சீர்மிகு பண்ணைப் பயிர். மனித வாழ்கைக்குத் தேவைப்படும் பயனுள்ள பொருட்களை அதிக அளவில் தந்து வருகின்ற ஒரு அற்புதமான மரம் இது. அதனால் தான் தென்னை கற்பகத்தரு என்று போற்றப் படுகிறது. எத்தனையோ மரங்கள் இருந்தாலும், பத்துப் பன்னிரெண்டு தென்னைகள் பக்கத்திலே வேண்டும், என்றுப் பாடினார் பைந்தமிழ் கவிஞர் பாரதியார்.
இன்று உலகளவில், இந்தியா உட்பட 93 நாடுகளில், சுமார் 12 மில்லியன் எக்டர்களில் தென்னை பயிரிடப்படுகிறது. 67,000 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இன்று 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 2.95 மில்லியன் எக்டர்களில் தென்னை பயிரிடப்படுகிறது. சுமார் 22.23 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தென்னையின் உற்பத்தித் திறன் 10,611 தேங்காய்கள் 1 எக்டர் என்ற அளவில் உள்ளது. உலகளவில் இதுதான் உயர்ந்த உற்பத்தித் திறன் ஆகும்.
இந்திய பொருளாதாரத்தில் தென்னையின் பங்களிப்பு 25 பில்லியன் ரூபாய்களாகும். ஏற்றுமதி மூலம் 34.77 பில்லியன் ரூபாய் அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்தியாவில் சுமார் ஒரு கோடி மக்கள் தென்னையை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சீர்மிகு தென்னையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தோனோசியா நாட்டின் தலைநகரமான ஜகார்த்தாவில் அமைந்துள்ள "ஏசியன் பசிபிக் கோக்கனட் கம்யூனிட்டி" என்ற அமைப்பானது தென்னை மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பில் இந்திய உட்பட 18 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த தினத்தை நினைவு கூறும் வகையில், இந்த உலக தென்னை தினம் 1999 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவிலுள்ள கொச்சி நகரில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது தென்னை வளர்ச்சி வாரியம். இந்த உலக தென்னை தினத்தை இந்தியாவில தென்னை சாகுபடி நடைபெறும் 18 மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடு வருகிறது. தேசிய அளவில் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வரில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தாமோதர் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Share your comments