1. செய்திகள்

சர்வதேச பால் தினம்: உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்றது

KJ Staff
KJ Staff

உலகின் பல கோடி மக்களுக்கு முழுமையான உணவுப் பொருளாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவாகவும் பால் விளங்குகிறது. பாலின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் பால் உற்பத்தியை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டவும் 18 ஆண்டுகளுக்கு முன் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலக அளவில் பால் தினம் கொண்டாட தீர்மானிக்கிறது.

உலகின் பல நாடுகள் ஏற்கனவே ஜூன் 1ம் தேதியை தேசிய அளவிலான பால் தினமாக கொண்டாடி வந்ததால் அந்த நாளையே சர்வதேச பால் தினமாக அறிவித்து 2001ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பால் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகில் பிறந்த எல்லோருமே பாலை பருகியே இருக்கின்றனர். வீகன்கள் (விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பவர்கள்) கூட தங்களுடைய இளம் வயதில் பால் பருகியே இருப்பர்.

குறைந்த செலவில் ஓர் நாட்டின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்பவை பாலும் முட்டையும் தான். இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை நிலையும் பால் உற்பத்தியை சுற்றியே வட்டமடிக்கின்றன.

சர்வதேச பால் சந்தையில் பல ஆண்டுகளாக முதல் நிலை உற்பத்தியாளர் எனும் நிலையை இந்தியா தக்க வைத்து கொண்டிருப்பதற்கு காரணமான வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை தேசிய பால் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.

விலங்கு வழி மனிதர்களுக்கு பரவும் நோய்கள் காய்ச்சாமல் பருகும் பாலின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பாலினை கொதிக்க வைத்தே பருக வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் மற்றும் இதர பால் பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து நோய் உண்டாக்கும் கிருமிகள் கொல்லப்படுவதால் அவற்றை கொதிக்க வைக்காமல் பருகுவதில் தவறில்லை.

ஆட்டுப்பால் மற்றும் கழுதைப்பாலை காய்ச்சாமல் குடிக்கும் பொழுது அந்த விலங்குகள் காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கும் அந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பால் நமக்கான நல்ல உணவு மட்டுமல்ல நோய்க் கிருமிகளுக்கும் நல்ல ஊடகம் என்பதை இந்நாளில் உணர்ந்துக் கொள்வோம்.

English Summary: World Milk Day: Nutrition For All The Animals And Human: Naturally Rich In Protein And Calcium Published on: 01 June 2019, 08:04 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.