வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர யாஸ் புயல் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் - சாகர் தீவுக்கு இடையை பாலசுருக்கு அருகே கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்காளத்தில் புயல் பாதிப்பு
இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காளத்தில் யாஸ் புயலின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் 14 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 9 ஆயிரத்து 830 பேர் பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து
யாஸ் புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக செல்லும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதில் சென்னை, திருச்சி, புதுவை ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 4 விரைவு ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல்- ஹவுரா (எண்- 02822) இன்றும், நாளையும் ரத்து.
-
திருச்சி- ஹவுரா (எண்- 02664) இன்று ரத்து.
-
சென்னை- நியூ ஜல்பைடி (எண்- 02611) நாளை ரத்து.
-
புதுவை- ஹவுரா (எண்- 02868) நாளை ரத்து.
சென்னை வானிலை மையம்
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக நாளை முதல் வரும் 29ம் தேதி வரை கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைகாற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
Share your comments