விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கோயம்பேட்டில் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு பலவகை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு அக்டோபர் முதல் பருவமழையால் பலவகை காய்கறிகளின் விளைச்சல் பாதித்தது. அதனால், விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை, கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விளைச்சல் அதிகரிப்பு (Yield Increased)
தற்போது, மாநிலத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோயம்பேடில் மொத்த விலையில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது.
நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முள்ளங்கி 8-10, சவ்சவ் 5-8, கத்தரிக்காய் 10-15, பாகற்காய் 15, சுரக்காய் 10, சேனைக்கிழங்கு 13, சேப்பங்கிழங்கு 15 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளரிக்காய் 10, இஞ்சி 20, அவரைக்காய் 20, நுாக்கல் 12, கோவக்காய் 15, வாழைக்காய் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ தக்காளி 25, உருளைக்கிழங்கு 15, பெரிய வெங்காயம் 20-35, சின்னவெங்காயம் 50-65, பீட்ரூட் 30, கேரட் 40, வெண்டைக்காய் 30, கோஸ் 40, பச்சைமிளகாய் 35 ரூபாய்க்கு விற்பனையானது.
கூடுதல் விலைக்கு விற்கும் வியாபாரிகள் (Merchants who sell at extra cost)
காய்கறிகள் விலை கோயம்பேடில் குறைந்தாலும், அவற்றை வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், தங்கள் பகுதிகளில் கூடுதல் விலையிலேயே அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், காய்கறிகள் விலை குறைவின் பயனை அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி சாதனை படைத்த பெண் விவசாயிகள்!
Share your comments