கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட விவசாயத்திற்கு "ஜீரோ பட்ஜெட் விவசாயம்" என்ற முறையை பின்பற்ற உள்ளோம் என்றார் .
ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய பார்வை
வெகு சிலருக்கு மட்டுமே இதன் முழுமையான பொருள் தெரியும், பெரும்பாலானவருக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. சரி முதலில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
இன்று பெரும்பாலான விவசாகிகள் ரசாயன விவசாயத்திற்கு விடை கொடுத்து விட்டு இயற்கை விவசாயம் செய்ய தொடங்கி விட்டார்கள். அதனால் தான் அரசும் இம்முறை பட்ஜெட்டில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் நம் முன்னோர்கள் பின்பற்றிய முறைக்கு செல்ல இருக்கிறோம். வெகு சிலர் இதனை நடைமுறை படுத்தி செய்தும் வருகிறார்கள்.
மராத்தியத்தை சேர்ந்த திரு சுபாஷ் பலேகர் இந்த முறை விவசாயத்தில் இந்தியாவின் முன்னோடி எனலாம். இவர் இந்த விவசாயத்தை எளிய முறையில் செய்து வெற்றியும் கண்டுள்ளார். அவர் கூறும் போது " விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்ததாக கூறினார்.
விவசாயத்திற்கு தேவைப்படும் இடு பொருட்களின் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) நாளுக்கு நாள் ஏறி கொண்டே போகின்றன. மேலும் மண் வளமும் நாளுக்கு நாள் ரசாயன கலவையாக மாறி வருகிறது. ஜீரோ பட்ஜெட் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார். இந்த முறையில் விவசாயி வெளியில் இருந்து எந்த ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாட்டு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏக்கர் வரை விவசாயம் செய்ய முடியும், கோமூத்திரம், பசுசாணி போன்றவையே போதுமானது என்கிறார்.
இயற்கையாகவே மண்ணில் நுண்ணுயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் ஒன்றே சரியானதாகும். ஒரு கிராம் பசுவின் சாணம் ஐநூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்கின்றன. மண்ணின் நலத்தை உயர்த்த, பல ஆண்டுகள் பல விதமான ஆராய்சிகளை மேற்கொண்டு இறுதியாக நாட்டு பசு தான் சரியாக வரும் என்று கூறினார்.
தாவர வளர்ச்சிக்கு தேவையான 98% சத்துகள், அதாவது கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன், தண்ணீர், சூரிய ஒளி போன்றவைகள் இயற்கையாகவே இந்த பூமியில் கிடைக்கிறது. மீதமுள்ள 2% சத்துக்களை நாம் மண்ணில் உள்ள நுண்ணியிரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதினால் செலவு குறைவதுடன் ரசாயன கலப்படம் இல்லாத பொருட்களை விளைவிக்க முடியும்.
சுபாஷ் பலேகரா கூறுகையில் நான்கு முறைகளை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யலாம் என்கிறார். ஜீவாமிர்தம், பிஜாம்ரிதம், முல்சிங், மற்றும் வாபசா என்பனவாகும்.
ஜீவாமிர்தம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், மற்றும் வெல்லம், பருப்பு மாவு, தண்ணீர், மண் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கலவையாகும். இது நிலத்திற்கு தேவையான அனைத்து சத்துகளையும் தரக்கூடியது.
பிஜமிர்தம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை மருந்தாக பயன்படுத்துவது. இது இயற்கை முறையிலான பூச்சி கொல்லி, கிருமி நாசினி ஆகும்.
முல்சிங் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக புல் மற்றும் இழை தழைகளை நிலத்தில் பரப்புவது. நம் தமிழில் முடக்கத்தான் முறை என்போம், இவ்வாறு செய்வதால் நிலத்தின் வெப்பநிலை 25 முதல் 32 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்படும்.
வாபசா என்பது நிலத்திற்கு தேவையான நீரை தேவை அறிந்து வழங்குவது ஆகும்.
வேம்பு, கொய்யா, பப்பாளி, மாதுளை ஆகிய தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் அக்னி அஸ்திரா, பிரம்ஹஸ்திரா, நீமாஸ்திரா ஆகியவற்றை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
இவர் கூறும் முறையில் வேளாண் செய்ய தொடங்கினால் ஓர் இரு ஆண்டுகளில் வருமானம் இரட்டிப்பு ஆவதுடன் இழந்த இயற்கை வேளாண்மையினை மீட்டேடுக்கலாம் என உறுதியாக சொல்கிறார். இந்தியாவில் 1,63,034 விவசாயிகள் மட்டுமே பின்பற்றி வந்த நிலை மாறி தற்போது சுபாஷ் பலேகரா அவர்களின் முயற்சியால் 50 லட்சம் விவசாக்கிகள் பின்பற்றி வருகிறார்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments