மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) விதிகளைப் புதுப்பித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் எந்தெந்த சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உரிமை இல்லை என்பதற்கான விளக்கத்தையும் வெளியிட்டு உள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)
வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது வாடகை வீடுகளில் வசிக்கும் மாத சம்பளம் பெறும் நபர்களின் தங்குமிடம் செலவுகளை ஈடு செய்ய அரசு மற்றும் நிறுவனங்கள் அளிப்பது. HRA மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z.
X என்பது 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கானது. 7வது மத்திய ஊதியக் குழு (CPC) பரிந்துரைத்தபடி, X பிரிவுக்கு HRA 24 சதவீதம் வழங்கப்படுகிறது. Y என்பது 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கானது. Y பிரிவுக்கு HRA அளவு 16 சதவீதமாக வழங்கப்படுகிறது. மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் இடத்திற்கு Z எனத் தரம் பிரிக்கப்படுகிறது. இப்பிரிவுக்கு 8 சதவீதம் HRA வழங்கப்படுகிறது.
மத்திய செலவினத் துறை
மத்திய செலவினத் துறையின் அறிக்கைப் படி HRA விகிதங்கள் X, Y & Z வகுப்பு நகரங்களுக்குத் தற்போது 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதம் என மாற்றப்பட்டு உள்ளது. இது அகவிலைப்படி உயர்த்தப்படும் போதும் உயர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு மத்திய அரசு ஊழியர் எப்போதெல்லாம் HRA தொகை பெறத் தகுதி அடையமாட்டார் என்பதற்கான விளக்கத்தை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.
HRA யாருக்கெல்லாம் கிடைக்காது!
ஒரு ஊழியர் மற்றொரு அரசாங்க ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட அரசு தங்குமிடத்தைப் பகிர்ந்து கொண்டால் HRA கிடைக்காது.
ஒரு மத்திய ஊழியர் தனது பெற்றோர் / மகன் / மகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சி பொது நிறுவனம் அல்லது அரசு கட்டுப்பாட்டில் வரும் நகராட்சி, துறைமுக அறக்கட்டளை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அமைப்பால் ஒதுக்கப்பட்ட விடுதியில் வசிக்கிறார் என்றால் HRA கிடைக்காது.
மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சிப் பொது நிறுவனம், நகராட்சி, துறைமுக அறக்கட்டளை போன்ற அரசு அமைப்புகளால் கணவன் அல்லது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் இடத்தில் ஒரு மத்திய அரசு ஊழியர் தங்கியிருந்தால் HRA கிடைக்காது.
மேலும் படிக்க
Share your comments