கொல்கத்தா மாநிலம் மால்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை பிணைக் கைதிகளாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓல்ட் மால்டா பகுதியில் உள்ள முச்சியா சந்திரமோகன் உயர்நிலைப் பள்ளியில் நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. “தேவ் பல்லவ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தோளில் ஒரு பையுடன், யார் கண்ணிலும் சிக்காமல் பள்ளிக்குள் நுழைந்தான். நேராக தரைத்தளத்தில் உள்ள வகுப்பறைக்கு சென்று துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டினார். கற்பிப்பதை நிறுத்துமாறு ஆசிரியரை மிரட்டி, பல்லவ் பின்னர் பெட்ரோல் குண்டு மற்றும் ஆசிட் கொள்கலனை வகுப்பறையில் இருந்த மேஜையின் மீது வைத்தார்." அதன்பின்னர் பல்லவ் ஒரு காகிதத்தை எடுத்து, நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மீதான புகார்களை பட்டியலிடத் தொடங்கினார்.
இதுக்குறித்த தகவல் அருகிலிருந்த காவல் நிலையித்திற்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் பள்ளியைச் சுற்றி வளைத்தனர். மேலும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, தேவ் பல்லவ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து அவரைப் பிடித்தார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தேவின் இடுப்பில் மற்றொரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் தேவ் பல்லவின் மனைவி ஒரு பாஜக உறுப்பினர் என தெரிய வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாயத்தில் பாஜக உறுப்பினராக உள்ள அவரது மனைவிக்கு ஆளும் கட்சியினருடன் ஏதேனும் தகராறு இருந்ததா அல்லது தம்பதியினருக்கு இடையே ஏதேனும் தகராறு இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவின் மீது பாய்ந்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய டிஎஸ்பி முகமது அசாருதீன் தெரிவிக்கையில், “நான் கவனமாக வகுப்பறையின் கதவுக்கு அருகில் சென்றேன். மாணவர்களின் பயம் கலந்த வெளிறிய முகங்களைப் பார்த்தேன். எனக்கு சமீபத்தில் தான் திருமணமாகியது. அவன் கவனம் திசை மாறிய நிலையில், தேவ் மீது பாய்ந்து அவரை தரையில் படுக்க வற்புறுத்தினேன். விரைவில், மற்ற போலீசாரும் எனக்கு உதவ வந்தனர்,'' என்றார்.
தேவ் பல்லவ் தற்போது கைது செய்யப்பட்டு ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர், “டெல்லியில் இருந்து சதித் திட்டம் தீட்டப்படுகிறது. யார் பின்னால் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது தனது மனைவி - தன்னை மகனுடன் விட்டுச் சென்றுவிட்டதாக பல்லவ் கூறியதாகவும், அவர் மாநில நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் புகார் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளரா என்கிற மருத்துவ சோதனையினை மேற்கொள்ளவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
pic courtesy: video snap
மேலும் காண்க:
அரிசி, கோதுமையிலிருந்து தினை பக்கம் திரும்புங்க- NITI ஆயோக் அறிக்கை
Share your comments