தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் வசிப்பவர் கனகராஜ் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 29 வயதில் தனேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனும், 21 வயதில் கவிதா என்ற மாற்றுத்திறனாளி மகளும் இருந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தசைநார் குறைபாடு காரணமாக, கவிதா உயிரிழந்தார். தங்கையின் நினைவாக, நம்மைப் போல் கஷ்டப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி, எம்பிஏ பட்டதாரியான தனேஷ், மும்பையிலிருந்து சொந்த ஊரான கீழ விளாத்திகுளத்திற்கு வந்தார்.
சிறப்பு பள்ளி (Special School)
மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் நகரங்களில் மட்டுமே உள்ளதால், இவர்களின் சிரமத்தைக் குறைக்க சொந்த கிராமத்திலேயே, அதுவும் தனது சொந்த வீட்டையே மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை மையம் மற்றும் சிறப்பு பள்ளியாக மாற்றினார். பொதுவாக, பெற்றோர்கள் இறந்து விட்டால் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை துயரம் மிகுந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டும் விடையாக நாங்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப் அக்லூட் சிறப்பு பள்ளி என்று தனேஷ் உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.
இப்பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை முதல் புத்தகங்கள் வரை அனைத்துமே இலவசம். மாற்றுத்திறனாளிக மாணவர்களை காலை வீட்டிலிருந்து அழைத்து வருவதும், மாலை பள்ளி முடிந்த பிறகு வீட்டில் கொண்டு போய் சேர்ப்பதற்காக இலவச வேன் வசதியும் உள்ளது. தற்போது வரை 12 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டில் எனக்கு சொந்தமாக உள்ள 4.5 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மையத்தை அமைக்க உள்ளோம் என்றும் தனேஷ் கூறினார்.
சமூக அக்கறையுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பள்ளியை திறந்த தனேஷை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் தனேஷிற்கு வாழ்த்துகள்.
மேலும் படிக்க
வெட்ட வெட்ட இரத்தம் சிந்தும் மரம்: இயற்கையின் அதிசயம்!
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து வசதி: பெங்களூருவில் அறிமுகம்!
Share your comments