மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, இந்தியாவில் இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது இந்திய குடிமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் என்றும் அறிவித்தார். அதிக பாதுகாப்பு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறையை இ-பாஸ்போர்ட் வழங்கும் என்றும் கூறினார். இந்நிலையில் 2022-23-ஆம் நிதி ஆண்டிலிருந்து மக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளீதரன் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். 2022-ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான அரசின் திட்டங்கள் மற்றும் அதன் விவரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சர் முரளீதரன் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
இ-பாஸ்போர்ட் (E-Passport)
பாஸ்போர்ட்டின் முக்கியமான தகவல்கள் அதன் டேட்டா பேஜில் அச்சிடப்பட்டு, சிப்பில் ஸ்டோர் செய்யப்படும் என்று தெரிவித்தார். டாக்குமென்ட் மற்றும் chip-ன் பண்புகள் சர்வதேச சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) டாக்குமென்ட் 9303-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இ-பாஸ்போர்ட் பற்றி கூறி உள்ள அரசு அதிகாரிகள், இந்தியர்களுக்கான சர்வதேச பயண அனுபவம் இப்போது இ-பாஸ்போர்ட்களின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பானதாக மற்றும் வசதியாக இருக்கும். புதிய சிப் அடிப்படையிலான பாஸ்போர்ட்களை வழங்குவது இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தொடங்கும் என்றும் கூறி உள்ளார்கள்.
நன்மைகள் (Benefits)
இ-பாஸ்போர்ட் உள்ள பயணிகள் சில நொடிகளில் ஸ்கேன் செய்து விடுவதால், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. இ-பாஸ்போர்ட் தனிநபர்களின் பயோமெட்ரிக் பதிவை கொண்டிருக்கும் என்பதால் டேட்டா திருட்டு மற்றும் டூப்ளிகேட் பாஸ்போர்ட் உள்ளிட்ட மோசடிகளை தடுக்கும். மேலும் பாஸ்போர்ட் டேட்டாக்களின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்.
புதிய இ-பாஸ்போர்ட்டுகளில் ஒரு சிப் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளை பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் அணுகலாம். அறிக்கைகளின்படி தனிநபர்களின் அடையாளத்தைக் கண்டறிய இ-பாஸ்போர்ட், ரேடியோ-அதிர்வெண் அடையாளம் (RFID - radio-frequency identification) மற்றும் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தும் என தெரிகிறது. பாஸ்போர்ட்டில் அறிமுகமாக உள்ள இந்த புதிய தொழில்நுட்பம் அனைத்து குடிமக்களுக்கும் சிறப்பான பயண அனுபவத்தை அளிக்கும்.
பயணிகளின் பெயர், முகவரி, ஐடி ப்ரூஃப் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை கொண்ட பாஸ்போர்ட்டில் சிப் பதிக்கப்பட்டிருக்கும். மாதிரி இ-பாஸ்போர்ட்டுகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்ப சூழல் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு முடிந்தவுடன் முழு அளவிலான உற்பத்தி மற்றும் வெளியீடு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இ-பாஸ்போர்ட்டின் சிப் சேதப்படுத்தப்பட்டிருந்தால் கணினியால் அதை கண்டறிய முடியும். இ-பாஸ்போர்ட் பாதுகாப்பான பயோமெட்ரிக் தரவு மற்றும் இமிகிரேஷன் போஸ்ட்கள் மூலம் உலகளவில் சுமூக பயணத்திற்கு உதவும் என்று அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான தொழில்நுட்பப் பொறுப்புகளை தேசிய தகவல் மையத்திடம் (என்ஐசி) வெளியுறவு அமைச்சகம் ஒப்படைத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
PF வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்க குறைதீர்ப்பு முகாம்!
சுற்றுலாத் தலமாகும் சர்வதேச விண்வெளி மையம்: இவ்வளவு செலவாகுமா?
Share your comments