பங்களிப்பு பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகவிலை நிவாரணத்தொகை 15% உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், பங்களிப்பு பென்சன் திட்டத்தின் (CPF) பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 15% உயர்த்தியுள்ளது அரசு.
ஜூலை 1 முதல்
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், பங்களிப்பு பென்சன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகவிலை நிவாரணத்தை 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்த குடியரசு தலைவர் முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
கருணை தொகை
அகவிலை நிவாரணத் தொகை அடிப்படை கருணைத் தொகையில் 381 விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துளது. 1960 நவம்பர் 18ஆம் தேதி முதல் 1985 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற ஏ, பி, சி, டி பிரிவு பயனாளிகளுக்கு முறையே ரூ.3000, ரூ.1000, ரூ.750, ரூ.650 கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத் தொகையில் 381% அகவிலை நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அகவிலை நிவாரணம் 396% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஜூலை 1 முதல் இந்த அகவிலை நிவாரண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், மேற்கூறியபடி தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை உயரும். மேலும், ஜூலை முதலான மாதங்களுக்கு அகவிலை நிவாரணம் நிலுவைத்தொகையும் கிடைக்கும். இறந்துபோன ஓய்வூதியதாரர்களின் கணவன்/மனைவி அல்லது தகுதியான பிள்ளைகளுக்கும் இந்த அகவிலை நிவாரண உயர்வு பொருந்தும்.
மேலும் படிக்க...
Share your comments