ஒன்றிய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level — Examination, 2023)" தொடர்பான அறிவிப்பினை 03.04.2023 அன்று வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு (https://www.careerpower.in/blog/wp-content/uploads/2023/04/03201925/ssc-cgl-notification-2023.pdf) என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.
இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்விணையதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது- மானியக் கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு
Share your comments