இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் சூழ்நிலையில் இன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பட்டுக்கோட்டையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பினை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2023 மற்றும் 02.11.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.11.2023 மற்றும் 04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்பார்த்த மழை இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read more:
நபார்டு வங்கி நிதியுதவியுடன் 40 நவீன நெல் சேமிப்புத் தளம்- அரசாணை வெளியீடு!
Kalamassery blast: கொச்சியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு- ஒருவர் பலி
Share your comments