கோடைக்காலம் முடிந்தது என கருதிய நிலையில் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியினை தந்துள்ளது. அதிகப்பட்சமாக அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 15 செ.மீ மழையும், BASL முகையூரில் 12 செ.மீ, கிராண்ட் அணைக்கட்டு, BASL மணம்பூண்டி, கும்பகோணம் பகுதியில் தலா 11 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அதேப் போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம் பின்வருமாறு-
10.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் இயல்பை விட 6 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான மழையளவு 142.8 மிமீ. வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட பொதுமக்கள் மழையினை எதிர்ப்பார்த்து உள்ளனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை தொடர்பான முழு விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
குடும்பத் தலைவிக்கான 1000 ரூபாய்- மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய அரசு
Share your comments