கடலுார் மாவட்டத்தில் 383 கிராமப் புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யும் நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அமல்படுத்தியிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்களின் வீண் அலைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையானது விரைவு தபால் சேவை, ரிஜிஸ்டர் தபால், சேமிப்பு கணக்கு துவக்கம், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன் மகள் வைப்பு திட்டம், தொடர் சேமிப்பு, கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு திட்டம், ஆன்-லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நடைமுறை என பல்வேறு சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
471 தபால் நிலையங்கள்
கடலுார் மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 அஞ்சலக கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 தலைமை தபால் நிலையங்கள், 85 துணை தபால் நிலையங்கள், 383 கிராமப் புற கிளை தபால் நிலையங்கள் என மொத்தம் 471 தபால் நிலையங்கள் உள்ளன.
தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்களில் மட்டுமே விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது.
வீண் அலைச்சல்
நாடு முழுதும் கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவை பதிவு நடைமுறை இல்லாமல் இருந்தது.இதனால் கிராமப் புற மக்கள் அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், துணை தபால் நிலையங்களுக்கும் சென்று தான் விரைவு தபால் சேவை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் வீண் அலைச்சலும், கால விரையமும் ஏற்பட்டது.
புதிய நடைமுறை
கிராமப் புற மக்களும் பயன் பெறும் வகையில் நாடு முழுதும் கிராமப் புற கிளை தபால் நிலையங்களில் விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யும் நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்திலும் இந்நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் 383 கிராமப் புற கிளை தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இங்கு, விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி
இதற்காக, தபால்காரர்களுக்கு கையடக்க கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கையடக்க கருவியில் விரைவு தபால் சேவைக்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து தபால்காரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக கிராமப் புற மக்கள் தங்கள் பகுதியிலேயே உள்ள கிராமப் புற தபால் நிலையங்களில் நேரிடையாக சென்று விரைவு தபால் சேவைக்கு பதிவு செய்யலாம்.தபால்காரர்களை மொபைலில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரவழைத்தும் பதிவு செய்து கொள்ளலாம்' என்றார்.
மேலும் படிக்க...
Share your comments