ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தை பத்தே நாட்களில் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
இழுபறி
ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டாலும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இழுபறியாகவே உள்ளது.
அமலில்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் (CPS) இன்னமும் அமலில் இருக்கிறது. இதை ஒழிப்பதற்காகவே CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இமாசலப் பிரதேச மாநிலத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கோரிக்கைகள் வலுத்துள்ளன. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது.
10 நாட்களில்
அதுவும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் 10 நாட்களுக்குள் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அனைத்திந்திய காங்கிரஸ் குழு உறுப்பினரான சோஹன் லால் தாகூர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் வழங்கியுள்ள 10 முக்கிய வாக்குறுதிகளில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது என்ற வாக்குறுதிக்கே முதலிடம் கொடுத்து அதை உடனடியாகச் செய்து முடிப்போம் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
3 லட்சம் குடும்பங்கள்
அப்படி இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநிலத்தில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய பென்சன் திட்டம்
2004ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் இமாசலப் பிரதேச மாநிலத்தில் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்போது பழைய பென்சன் திட்டம் மீண்டும் வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments