உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞரிடம் இருந்த பையை பறித்து, மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணமழை
உ.பி., மாநிலம் ராம்பூர் மாவட்டம், ஷாகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் சர்மா, வழக்கறிஞர். இவர், முத்திரை தாள்கள் வாங்குவதற்காக ஒரு பையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கருவூல அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அங்கு வந்த ஒரு குரங்கு, வினோத் குமாரிடம் இருந்த பணப் பையை பறித்துக் கொண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த வினோத் குமார் குரங்கை துரத்தினார். அருகிலிருந்த மரத்தில் குரங்கு வேகமாக ஏறியது.
குரங்கை வினோத் குமார் துரத்திச் சென்றதை பார்த்தவர்கள் மரத்தடியில் கூடினர். பையை திறந்த குரங்கு, அதிலிருந்த இரண்டு பணக் கட்டுகளை எடுத்துக் கொண்டு பையை மட்டும் கீழே போட்டது. பையை வினோத் குமார் எடுத்து பார்த்த போது அதில் 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. இதற்கிடையில், இரண்டு பணக் கட்டுகளை எடுத்த குரங்கு, அதை பிரித்து மரத்தில் தாவி குதித்தபடி கீழே விசிறியடித்தது.
மரத்தடியில் இருந்தவர்கள் பணத்தை எடுத்து வினோத் குமாரிடம் கொடுத்தனர். எனினும் 95 ஆயிரம் ரூபாய் மட்டுமே வினோத் குமாருக்கு கிடைத்தது. பணத்தை எடுத்த சிலர், அதை வினோத் குமாரிடம் கொடுக்காமல் சென்றுவிட்டது தெரிந்தது. எனினும், 'இந்த அளவாவது திரும்பக் கிடைத்ததே' என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த மக்களுக்கு வினோத் குமார் நன்றி கூறினார்.
பணத்தை குரங்கு வீசியதையும், அதை மக்கள் பொறுக்கி எடுத்ததையும் 'வீடியோ' எடுத்த சிலர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மேலும் படிக்க
குழந்தை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்து ராஜஸ்தான் அரசு அடாவடி!
ஜப்பானில் அதிசய இளைஞர்: 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார்!
Share your comments