அமைப்பு சார்ந்த துறைகளில், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத ஊதியம் பெறுவோருக்கு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, தொழிலாளர் சேமநல நிதியமான, இ.பி.எப்.ஓ., பரிசீலித்து வருகிறது. தற்போது, அமைப்பு சார்ந்த துறைகளில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை மாத அடிப்படை ஊதியம் பெறுவோரிடம், தொழிலாளர் சேம நல நிதியத்தின் ஓய்வூதிய திட்டத்திற்காக, 8.33 சதவீத தொகைபிடித்தம் செய்யப்படுகிறது. அதே சமயம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாத அடிப்படை ஊதியம் பெறுவோரும், 15 ஆயிரம் ரூபாய்க்கான 8.33 சதவீத தொகையைத் தான் தொழிலாளர் சேம நல நிதியத்திற்கு தர வேண்டியுள்ளது.
ஓய்வூதியம் (Pension)
தங்கள் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப, கூடுதலாக சேம நல நிதியத்தில் சேமித்து, அதிக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். இது குறித்து, தொழிலாளர் சேமநல நிதியத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: தற்போது, 15 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை ஊதியம் பெறுவோர், கட்டாயம் தொழிலாளர் சேமநல நிதியத்தில், மாதம் 8.33 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.
பரிசீலனை (Review)
இந்த வரம்பை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, அதிக ஊதியம் பெறுவோரின் நீண்ட கால கோரிக்கை. இதன் வாயிலாக, தொழிலாளர் சேமநல நிதியத்திற்கு, மாதம் அதிக சந்தா செலுத்தி, ஓய்வூதிய பலன்களை கூடுதலாகப் பெறலாம். இது குறித்து, அசாமில் மார்ச் 11ல் நடக்க உள்ள தொழிலாளர் சேமநல நிதியத்தின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில், ஓய்வூதியப் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட துணைக் குழுவும் அதன் அறிக்கையை அளிக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, உயர் ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.
மேலும் படிக்க
போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வந்திருக்கும் புதிய விதிமுறை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
புதிய ஓய்வூதியத் திட்டம்: பென்சன் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்!
Share your comments