கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வருகிற டிசம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் நெல்லை, தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமெடுத்துள்ள நிலையில், மிக் ஜாம் புயலினால் வட கடலோர மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வால்பாறை பகுதியில் 3 செ.மீ மழையும், சின்கோனா பகுதியில் தலா 2 செ.மீ மழையும், ஸ்ரீவைகுண்டம், பார்வூட், நாலுமூக்கு பகுதியில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இதனிடையே அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.12.2023 மற்றும் 17.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்: 14.12.2023 முதல் 16.12.2023 வரை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
Read also:
விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
security breach in Lok Sabha: நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 2 நபர்களால் பரபரப்பு
Share your comments