தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநில அரசு சார்ப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா வைரஸ் தொற்றின் எதிரொலியாக, கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24 வரை) ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரவினைத் தொடர்ந்து பள்ளிகள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் மூடப்படும். இந்த நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரள மாநிலத்தில் பரவி வரும், நிபா வைரஸானது வங்காளதேச மாதிரி ஆகும். இது மனிதர்களிடமிருந்தும் பரவுகிறது. குறைந்த வகையிலான தொற்று நோயாக இருப்பினும் உயிரிழப்பு தன்மை அதிகமாக உள்ளது பல்வேறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி இல்லாத இந்த வைரஸானது பாதிக்கப்பட்ட வெளவால்கள், பன்றிகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் பரவுகிறது. இறப்பு விகிதம் 75% வரை உள்ள அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், செப்டம்பர் 15 அன்று நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 130 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 1,080 பேராக உயர்ந்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதாரப் பணியாளர்கள்.
கோழிக்கோடு தவிர, பிற மாவட்டங்களில் 29 நபர்கள் நிபாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 22 பேர் மலப்புரத்தையும், ஒருவர் வயநாட்டையும், தலா 3 பேர் கண்ணூர் மற்றும் திருச்சூரையும் சேர்ந்தவர்கள்.
பட்டியலிடப்பட்டவர்களில், 175 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் கருதப்படுகிறார்கள், அதே நேரத்தில் 122 பேர் சுகாதாரப் பணியாளர்கள். தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 30 அன்று இறந்த நபரின் தகனத்தில் கலந்து கொண்ட 17 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நிபாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கர்நாடக அரசு செப்டம்பர் 14 ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. கர்நாடகாவின் எல்லையோர மாவட்டங்களான குடகு, தக்ஷின் கன்னடா, சாம்ராஜநகரா மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாநிலத்தின் நுழைவு எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு நடைப்பெற்று வருகிறது.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் பொதுமக்களை முகமூடி அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சளி, காய்ச்சல், தலைவலி அல்லது இருமல் போன்ற அறிகுறிகளை சந்தித்தால் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தலைத்தூக்கியுள்ள நிபா வைரஸினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் காண்க:
இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு AIC சார்பில் ஒரு நற்செய்தி
பெண்களுக்கான ரூ.1000- களப்பணியாளர்கள் குறித்து முதல்வர் ட்வீட்
Share your comments